திருடிய பணத்தை மீண்டும் போட்டுவிட்ட ஆசாமி; ‘மனவேதனையில் நிம்மதியின்றி தவிக்கிறேன் மன்னித்து விடுங்கள், கடவுள் மன்னிப்பாரா’: உண்டியலில் மர்ம நபர் கடிதம்; ராணிப்பேட்டையில் பரபரப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை அருகில் சிறப்புமிக்க காஞ்சனகிரி மலைக்கோயில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி கிரிவலம், பிரதோஷம், கிருத்திகை, சிவராத்திரி, அமாவாசை, சங்கடஹர சதுர்த்தி, ஆடி அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

இங்குள்ள 1008 சுயம்பு லிங்கங்களுடன் கூடிய விநாயகர் சன்னதியில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப காணிக்கை செலுத்துகின்றனர். கடந்த மே 17ம்தேதி அதிகாலையில் மர்ம நபர்கள், உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கோயில் நிர்வாகத்தினர், நேற்று காஞ்சனகிரி மலைக்கோயில் உண்டியலை திறந்து பணத்தை எண்ண திட்டமிட்டனர். தலைவர் பாலன் மற்றும் குழுவினர் உண்டியலை திறந்தனர். அதில் பணத்துடன் கடிதம் ஒன்று இருந்தது. அதில், ‘என்னை மன்னித்து விடுங்கள். நான் சித்ரா பவுர்ணமி முடிந்து சில நாட்கள் கழித்து கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி விட்டேன். அப்போதிலிருந்தே எனக்கு மனசு சரியில்லை.

நிம்மதி இல்லை. வீட்டிலும் நிறைய பிரச்னை தொடர்ந்து வருகிறது. எனவே, நான் மனம் திருந்தி உண்டியலில் எடுத்த பணம் ரூ.10 ஆயிரத்தை போட்டு விட்டேன். எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். கடவுளே என்னை மன்னிப்பாரா தெரியாது. வணக்கம்’ என்று எழுதப்பட்டு இருந்தது. கடிதத்துடன் ரூ.500 நோட்டுகளாக ரூ.10 ஆயிரம் இருந்தது. இத்தகவல் காட்டுத்தீ போல் அக்கம் பக்கம் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: