ஆஸி.க்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி 4 ரன் வித்தியாசத்தில் இலங்கை த்ரில் வெற்றி: 30ஆண்டுக்கு பின் சொந்த மண்ணில் தொடரை வென்று அசத்தல்

கொழும்பு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் 4வது ஒருநாள் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை 49 ஓவரில் 258ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக சரித் அசலங்கா 110 ரன் (106 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார். ஒருநாள் போட்டிகளில் இது அவருக்கு முதல் சதமாகும். தனஞ்ஜெயா டிசில்வா 60 ரன் அடித்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் பாட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ், மேத்யூ குஹ்னெமன் தலா 2விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பிஞ்ச் டக்அவுட் ஆக, மிட்செல் மார்ஷ்26, மார்னஸ் லாபுசாக்னே 14, அலெக்ஸ் கேரி 19, டிராவிஸ் ஹெட் 27, மேக்ஸ்வெல் 1, பாட்கம்மின்ஸ் 35ரன் எடுத்தனர். டேவிட் வார்னர் 99 ரன்னில் ஸ்டெம்பிங் ஆனார். கடைசி ஓவரில் ஒருவிக்கெட் கைவசம் இருந்த நிலையில் 19 ரன் தேவைப்பட்டது. தசுன் ஷனகா வீசிய அந்த ஓவரில், மேத்யூ குஹ்னெமன்  3பவுண்டரி உள்பட 14 ரன் எடுத்த நிலையில் கடைசி பந்தில் 5ரன் தேவைப்பட்டது. அந்த பந்தில் மேத்யூ குஹ்னெமன் கேட்ச் ஆனார். இதனால் 50 ஓவரில் 254ரன்னுக்கு ஆஸ்திரேலியா ஆல்அவுட் ஆக இலங்கை 4ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது. சரித் அசலங்கா ஆட்டநாயகன் விருது பெற்றார். முதல் போட்டியில் தோல்வி அடைந்த இலங்கை அடுத்த 3 போட்டியிலும் வெற்றி பெற்று(3-1)என தொடரைகைப்பற்றியது.

கடந்த 30 ஆண்டுகளில் ஆஸி.க்கு எதிராக சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை  இலங்கை வென்றது இதுவே முதல்முறை. கடைசியாக 1992ம் ஆண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என இலங்கை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கடைசி போட்டி நாளை மறுநாள் நடக்கிறது. வெற்றிக்கு பின் இலங்கை கேப்டன் தசுன் ஷனகா கூறுகையில், கடைசி ஓவரில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் வீசுவதை விட நானே சவால்எடுப்பது சரியான யோசனையாக இருந்தது. சரித், தனஞ்ஜெயா சிறந்த பார்ட்னர்ஷிப்அமைத்தனர். துரதிர்ஷ்டவசமாக  நாங்கள்அதிக ஸ்கோர் எடுக்கமுடியவில்லை. இருப்பினும் இந்த ஸ்கோரால் மகிழ்ச்சியாக இருந்தோம். இந்த வெற்றி எனக்கு மட்டுமல்ல, அணிக்கும், இலங்கை கிரிக்கெட்டுக்கும், முழு நாட்டிற்கும் மிகவும் தேவை.இதனை கொண்டாட வேண்டும், என்றார்.

Related Stories: