போலீசார் பற்றாக்குறையுடன் பேராவூரணி காவல் நிலையம்-புகார் தரமுடியாமல் மக்கள் தவிப்பு

பேராவூரணி :  பேராவூரணி போலீஸ் நிலையத்தில் போதிய அளவு போலீசார் இல்லாத நிலையில், பணிகள் தேக்கமடைந்து, பொதுமக்கள் குறைகள் தீர்க்கப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாலும், பணியில் உள்ள போலீசாரும் மனச்சோர்வுக்கு ஆளாகும் நிலையில் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் போதிய அளவு போலீசார் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேராவூரணியில் 1936ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் போலீஸ் நிலையம் துவங்கப்பட்டது. தொடங்கப்பட்ட காலத்தில், 21 காவலர்கள் பணியில் இருந்துள்ளனர். தற்போது 86 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பல மடங்கு மக்கள் தொகையும் குற்றச் செயல்களும் பெருகியுள்ள நிலையில் கூடுதல் போலீசார் நியமிக்கப்படவும் இல்லை.

மாறாக, ஏற்கனவே இருந்த போலீசார் கூட இல்லாத நிலையில் தற்போது 6 பேர் மட்டும் பணியில் உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப் இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார் என மொத்தம் 6 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். விடுப்பு, நீதிமன்றப் பணிகளுக்கு செல்லும் நிலை, பாஸ்போர்ட் விசாரணை, குற்றச் செயல்கள் விசாரணை என செல்வதற்கு காவலர்கள் தடுமாறும் நிலை உள்ளது. மேலும், அரசு உயர் அலுவலர்கள், அமைச்சர்கள் வருகைக்கு பாதுகாப்பு மற்றும் அரசியல் கட்சி பொதுக்கூட்டங்களுக்கு பாதுகாப்புக்கு செல்வது போன்ற நிலையில் போலீசார் செய்வதறியாது உள்ளனர்.

பேராவூரணி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட 92 கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள், நாள்தோறும் பல்வேறு பிரச்னைகளுக்காக போலீஸ் நிலையம் வந்து செல்கின்றனர். ஆனால், ஒவ்வொரு நாளும் போலீசார் பற்றாக்குறை காரணமாக நாளை வாருங்கள் என திருப்பி அனுப்புவதால், பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் தேவையற்ற மன வருத்தம் ஏற்படுகிறது.

இதனால், பொதுமக்கள் பிரச்னைகள் தீராத நிலை உள்ளது. கிராமங்களில் ஏற்படும் சிறு பிரச்னைகள் குறித்து உரிய நேரத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் அது மிகப் பெரிய கலவரமாக ஏற்படும் சூழல் உள்ளது. பேராவூரணி கடைவீதியில் நடைபெற்று வரும் தொடர் திருட்டு, கிராம பகுதிகளில் திருட்டு, மது விற்பனை, போதைப் பொருட்கள் விற்பனை ஆகியவற்றை கட்டுப்படுத்த முடியாமல் உள்ள சூழ்நிலை ஏற்படுகிறது.

இதனால் போலீஸ நிலையத்தில் புகார் கொடுத்து என்ன ஆகப்போகிறது என நிறைய பேர் திருட்டு வழக்குகளுக்கு புகார் அளிக்க செல்வதேயில்லை. இரவு, பகல் நேரங்களில் வாகன சோதனை செய்யப்படாததால் சிறுவர்கள், இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனத்தில் ஒலி எழுப்பியபடி, மின்னல் வேகத்தில் கடைவீதி, பேருந்து நிலையப் பகுதியில் செல்கின்றனர். இதனை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.

எனவே, பேராவூரணி பகுதி பொதுமக்கள் பிரச்னைகளை தீர்க்கும் வகையில் கூடுதல் போலீசார்களை பணியில் நியமிக்காவிட்டாலும் இங்குள்ளவர்களை மாற்றுப்பணிக்கு அனுப்பக் கூடாதெனவும், போக்குவரத்து காவல் பிரிவு ஏற்படுத்தவேண்டும் எனவும், தஞ்சை சரக டிஐஜி, எஸ்பி ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: