பொதுக்குழு திட்டமிட்டபடி நாளை மறுதினம் நடைபெறும் அதிமுகவுக்கு களங்கம் ஏற்படுத்த சில சந்தர்ப்பவாதிகள் முயற்சிக்கின்றனர்: ஓபிஎஸ் அணி மீது கே.பி.முனுசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: பொதுக்குழு திட்டமிட்டபடி நாளை மறுதினம் நடைபெறும். அதிமுகவுக்கு  களங்கம் ஏற்படுத்த சில சந்தர்ப்பவாதிகள் முயற்சி செய்கிறார்கள் என்று  ஓபிஎஸ் அணியினர் மீது கே.பி.முனுசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக வந்த தகவலையடுத்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு இடையே மோதல் நிலவி வரும் நிலையில் இரு தரப்பு ஆதரவாளர்களும் மாறி, மாறி பேட்டி அளித்து வருகின்றனர். இந்த நிலையில் பொதுக்குழு நடைபெறும் திருமண மண்டபத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தலைமையில் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், பென்ஜமின் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் பொதுக்குழு, செயற்குழு நடைபெறும் இடத்தை பார்வையிட்டு அங்கு நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது: ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் இல்லாமல் இந்த கூட்டம் நடைபெறாது.  மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆலோசனையின் பேரில்தான் நடைபெற்றது. அதில் ஒருங்கிணைப்பாளர்  ஓபிஎஸ், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொதுக்குழு கூட்ட முடியவில்லை. தற்போது கட்சி தேர்தல் முடிந்து உள்ளது. இதனை பொதுக்குழுவில் முறையாக அங்கீகாரம் பெற்று தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதில் சிறப்பு அழைப்பாளர்கள் யாரையும் அனுமதிக்ககூடாது. பொதுக்குழு உறுப்பினர்களை மட்டும் அழைத்து தீர்மானம் நிறைவேற்றி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தலைமையில் அனைவரின் ஒத்துழைப்பின்படிதான் முடிவு எடுக்கப்பட்டது.

பொதுக்குழுவில் கொண்டு வரப்பட உள்ள தீர்மானங்கள் குறித்த கமிட்டி கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கையெழுத்திட்டுள்ளார். இந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் கலந்து கொள்வார், கருத்துக்களை சொல்வார், தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அந்த தீர்மானங்களை ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் ஏற்றுக்கொள்வோம். பொதுக்குழு குறித்த தகவல் வெளியானபோது, 2000 பொதுக்குழு உறுப்பினர்கள் குறிப்பிட்ட தேதியில் பொதுக்குழுவை நடத்த வேண்டும் என கடிதம் எழுதினர். அதிமுகவில் சில சந்தர்ப்பவாதிகள் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக இந்த இயக்கத்திற்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். காலம் அவர்களுக்கு சரியான தண்டனை வழங்கும். இவ்வாறு அவர் கூறினார். ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் பொதுக்குழுவில் கொண்டுவரப்படுமா? என்ற கேள்விக்கு, ‘பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து இங்கு சொல்ல முடியாது’ என்றார்.

Related Stories: