அக்னிபாதை திட்டம் மூலம் பாஜவுக்காக ஒரு படையை உருவாக்க முயற்சிக்கின்றனர்: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா:  பாஜ தனக்கென பிரத்யே ஆயுத படைப்பிரிவை உருவாக்க முயற்சிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். அக்னிபாதை திட்டம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று சட்டமன்றத்தில் பேசுகையில், ‘‘அக்னிபாதை திட்டத்தின் மூலமாக தனக்கென பிரத்யேக ஆயுத படைப்பிரிவை உருவாக்குவதற்கு பாஜ திட்டமிட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு பின் அவர்கள் என்ன செய்வார்கள்? இளைஞர்கள் கையில் ஆயுதங்களை வழங்குவதற்கு பாஜ விரும்புகின்றது. அரசின் இந்த திட்டம் ஆயுத படை வீரர்களை அவமானப்படுத்துவதாக இருக்கிறது. 4 ஆண்டுகளுக்கு பின் அக்னிவீரர்களை தங்களது கட்சி அலுவலகங்களில் காவலர்களாக நிற்க வைப்பதற்கு பாஜ திட்டமிட்டுள்ளதா? ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று பாஜ வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது இந்த திட்டத்தின் மூலமாக நாட்டில் உள்ள மக்களை அவர்கள் முட்டாள் ஆக்குகின்றனர்’’ என்றார்.

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தனது டிவிட்டர் பதிவில், ‘கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை பாதித்த பணமதிப்பிழப்பு மற்றும் லாக்டவுன் நடவடிக்கை போன்று அவசரகதியில் அக்னிபாதை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுபோன்ற அகந்தை நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும்’ என்றார்.

சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ‘‘இந்த திட்டத்தால் இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அவர்களிடையே எதிர்காலம் குறித்த அச்சமும் பாதுகாப்பின்மையும் எழுந்துள்ளது. இந்த திட்டமானது நாட்டின் வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கும் என்பதை உறுதிபடுத்துகின்றது’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: