புளியந்தோப்பு காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த ஓவியப்போட்டி

பெரம்பூர்: சென்னையில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்த படிக்க வசதியில்லாத அதே நேரத்தில்  நன்றாக படிக்கும் மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து கல்வி உதவி தொகைகளை பாய்ஸ் கிளப், கேல்ஸ் கிளப் மூலம் கல்வி உதவிகளை அந்தந்த காவல் நிலையங்களில் உள்ள ஆய்வாளர்கள் செய்து வருகின்றனர். அவர்களை மென்மேலும் ஊக்குவிக்கும் வகையில் ஆண்டு தோறும் விளையாட்டு போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி வைத்து ஊக்குவித்து வருகின்றனர்.

இதன்படி, பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியில் உள்ள பள்ளியில் புளியந்தோப்பு காவல் மாவட்டம் சார்பில், பாய்ஸ் கிளப் மற்றும் கேல்ஸ் கிளப்பில் உள்ள மாணவ மாணவிகளுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது. செம்பியம் உதவி கமிஷனர் செம்பேடு பாபு, இன்ஸ்பெக்டர் ஐயப்பன். சதீஷ் ஆகியோர் ஓவியப் போட்டியை கண்காணித்து மாணவர்களை ஊக்குவித்தனர். 36 மாணவர்கள், 12 மாணவிகள்  என 48 பேர் கலந்து கொண்டனர். ஜூனியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் என மூன்று பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது.

 

ஒவ்வொரு பிரிவில் இருந்தும் தலா மூன்று பேர் வீதம் ஒன்பது பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மண்டல அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். வெற்றி பெறும் நபர்கள் ஒவ்வொரு மண்டலத்திற்கும் நடைபெறும் ஓவியப் போட்டியில் கலந்துகொண்டு அதில் வெற்றி பெறும்  நபர்களுக்கு சென்னை கமிஷனர் பரிசு பொருட்களை வழங்குகிறார்.

‘’மாணவர்களிடம் ஓவிய திறனை வளர்க்கவும் அவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கவும் இதுபோன்ற போட்டிகளில் நடத்தப்படுவதாகவும் காவல் மாவட்டங்கள் மூலம் நடத்தப்படும் பாய்ஸ் கிளப்பில் உள்ள மாணவ, மாணவிகள் சமூகத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது’ புளியந்தோப்பு சரக துணை கமிஷனர் ஈஸ்வரன் கூறினார்.

Related Stories: