கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் மகனை சிகிச்சை அளிக்க வைத்துவிட்டு நர்சுகளுடன் சுற்றுலா சென்று டாக்டர் ஜாலி: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கோபி: கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் மகனை சிகிச்சை அளிக்க வைத்து விட்டு, மருத்துவமனை செவிலியர்களுடன் சுற்றுலா சென்று ஜாலியாக இருந்த மருத்துவ அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை தலைமை மருத்துவராக பவானி குருப்பநாய்க்கன்பாளையத்தை சேர்ந்த தினகர்(57) உள்ளார். இவரை தவிர முதுநிலை உதவி மருத்துவர்களாக அசோக், வினோத்குமார், சரவணக்குமார், சண்முகவடிவு ஆகிய மருத்துவர்களும், 6 செவிலியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த மருத்துவமனைக்கு கவுந்தப்பாடி, பி.மேட்டுப்பாளையம், சலங்கபாளையம், அய்யம்பாளையம், கவுந்தப்பாடிபுதூர், தர்மாபுரி, கவுண்டன்புதூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். இங்கு தினமும் 300க்கும் மேற்பட்ட புற நோயாளிகளும், 20க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில், தலைமை மருத்துவராக உள்ள தினகர், நேற்று பணிக்கு வராமலும், முறையாக விடுப்பு எடுக்காமலும் மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளார். மருத்துவம் படித்துவிட்டு ஹவுஸ் சர்ஜனாக உள்ள அவரது மகன் அஸ்வின்(24) என்பவரை கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்குமாறு கூறிச்சென்றுள்ளார்.

அஸ்வினும் காலை முதல் இரவு வரை மருத்துவமனையில், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் முதல் இதய நோயாளிகள் வரை சிகிச்சை அளித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வயிற்று வலியால் அவதிப்பட்ட கவுந்தப்பாடியை சேர்ந்த முருகேசன் என்பவர் சிகிச்சை பெற சென்றுள்ளார். அப்போது அங்கு தலைமை மருத்துவர் தினகர் பணியில் இல்லாமல் அவரது மகன் பணியில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அங்கு அவருக்கு புறநோயாளிகள் பிரிவில் பதிவு செய்து டோக்கன் வழங்காமலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைபெற்ற முருகேசன், தலைமை மருத்துவர் குறித்து விசாரித்தபோது, அவர் விடுமுறையில் சென்று இருப்பதும், அவருக்கு பதிலாக அவரது மகனை சிகிச்சை அளிக்க அனுப்பி இருப்பதும் தெரிய வந்தது.

இதுகுறித்து சிகிச்சை அளித்த அஸ்வினிடம், முருகேசன் கேட்டபோது, அவர் பவானி அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவராக பணிபுரிந்து வருவதாகவும், மாற்று பணிக்காக வந்துள்ளதாக பொய்யான தகவலை கூறி உள்ளார்.

இந்நிலையில் மகன் சிகிச்சை அளிக்கும் விபரம் வெளியே தெரிய வந்ததை தொடர்ந்து தலைமை மருத்துவர் தினகர் உடனடியாக மருத்துவமனைக்கு வந்தார். அங்கு புகார் அளித்த நோயாளி முருகேசனை, தலைமை மருத்துவர் தினகர் மிரட்டினார். இதனால் அங்கிருந்த மற்ற நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவரே போலியாக மகனை சிகிச்சை அளிக்க வைத்து விட்டு விடுமுறையை கொண்டாட சென்றதும், அரசு மருத்துவர் எனக்கூறி தினகரின் மகன் சிகிச்சை அளித்ததும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: