கீழ்வேளூரை அடுத்த காணூரில் நீலப்பாடி வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்-அதிகாரிகள் நடவடிக்கை

கீழ்வேளூர் : நாகை மாவட்டம் கீழ்வேளுரை அடுத்த காணூர் என்ற இடத்தில் நாகை-திருவாரூர் மாவட்ட எல்லையில் ஓடம்போக்கி ஆற்றில் சட்டரஸ் உள்ளது. இந்த சட்டரசில் இருந்து ஆத்தூர், கூத்தூர், இலப்பூர், நீலப்பாடி என 8 வாய்க்கால்கள் பிரிகிறது. ஓடம்போக்கி ஆற்றில் இருந்து பிரியும் நீலப்பாடி வாய்க்கால் 24 ஏக்கர் நிலத்திற்கும், 5 குளங்களுக்கும் பாசனம் பெறும் வாய்க்காலாகும். காணூரில் இருந்து நீலப்பாடி வரை 2 கி.மீ. வரை சென்று பாசனம் வழங்கி மீண்டும் ஓடம்போக்கி ஆற்றில் வடியும் வடிகாலாகவும் உள்ளது.

இந்நிலையில் நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை 2 வழி சாலையாக விரிவாக்கம் பணி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. அப்போது நீலப்பாடி வாய்க்கால் தலைப்பில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்கத்தின் போது வாய்க்கால் தூர்ந்து போனது. இதனால் நீலப்பாடி வாய்க்கால் அடையாளம் தெரியாமல் சட்டரஸ் மதகு மட்டு உள்ளது. வாய்க்காலின் எஞ்சியப் பகுதி நன்றாக இருந்தும் சாலை விரிவாக்கத்தின் போது தூர்ந்து போன வாய்க்காலை தூர்வாரி 24 ஏக்கர் மற்றும் 3 குளம் பாசனம் பெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது.

தினகரன் செய்தி எதிரொலியால் தூர்ந்துபோன நீலப்பாடி வாய்க்கால் பொதுப்பணித்துறையின் சார்பில் புதிதாக தோண்டப்பட்டு, வாய்க்கால் முழுமையாக தூர்வாரப்பட்டு வருகிறது. மேலும் பழுதான வாய்க்கால் சட்டஸ்சும் சீரமைக்கப்பட உள்ளது. இதனால் கடந்த 8 ஆண்டுகாளாக பானம் இன்றி இருந்து நீலப்பாடி வாய்க்கால் பாசன விவசாயிகள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செய்தி வெளியிட்ட தினகரன் மற்றும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Related Stories: