ரயில் நிலையங்கள், ராணுவ தளங்களில் கூடுதல் கண்காணிப்பு; அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ‘பாரத் பந்த்’.! பீகார், உ.பி-யில் பள்ளிகள் விடுமுறை

புதுடெல்லி; அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதால், போராட்டத்தை ஒடுக்க பீகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் அக்னிபாதை திட்டத்திற்கு எதிர்ப்பு பலர் என தெரிவித்து வரும் நிலையில், அந்த திட்டத்தை திரும்பப் பெறமுடியாது ராணுவம் அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்புகள் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. அதனால் ரயில்வே பாதுகாப்புப் படையும் (ஆர்பிஎப்), மாநில ரயில்வே காவல்துறையும் (ஜிஆர்பி) உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வன்முறை சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி ரயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், செல்போன்கள், வீடியோ பதிவு சாதனங்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றவாளிகளுக்கு எதிரான டிஜிட்டல் ஆதாரங்களை சேகரிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வீடியோ காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபர்களை பிடித்து நடவடிக்கை எடுக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பாதுகாப்புக் கவசங்களை கட்டாயம் அணியுமாறு காவல்துறை அதிகாரிகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். முழு அடைப்பு போராட்டத்தால் பீகாரில் குறைந்தது 20 மாவட்டங்களில் இன்று இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. பஞ்சாப் மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ராணுவ தளங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் அல்லது வன்முறையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக வன்முறை நடந்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பீகார், உத்தரபிரதேசம், மேற்குவங்கம், அரியானா, பஞ்சாப், மத்தியபிரதேசம், டெல்லி, தெலங்கானா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ள ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில இடங்களில் 144 தடை உத்தரவும், இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டும் உள்ளன. டெல்லியை ஒட்டியுள்ள நொய்டாவில் ஏற்கனவே 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளூர் பிரமுகர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலி செய்திகளை வெளியிடுவோரை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். ஜார்க்கண்டில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் குறிப்பிட்ட மாவட்டங்களில் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பீகாரில் இன்று நடைபெறவிருந்த முதல்வர் நிதிஷ் குமாரின் ஜனதா தர்பார் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றைய முழு அடைப்பு போராட்டத்திற்கு சில அமைப்புகள் மட்டுமே அழைப்பு விடுத்துள்ளதால், சில மாநிலங்களில் மட்டும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மற்ற மாநிலங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இருந்தும் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ேபாலீசார் தீவிர கண்காணிப்பில் இருக்கின்றனர்.

Related Stories: