திண்டுக்கல் அருகே மதநல்லிணக்க மீன்பிடி திருவிழா-கிலோ கணக்கில் மீன்களை அள்ளிச் சென்றனர்

திண்டுக்கல் : மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் திண்டுக்கல் அருகே மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பொதுமக்கள் கிலோ கணக்கில் மீன்களை அள்ளிச் சென்றனர்.திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு பேரூராட்சி, மறவபட்டி கிராமத்தில் பெரியகுளம் உள்ளது. இந்த குளத்தில், ஊர் மக்கள் சார்பில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில், சுற்றுப்புற கிராம மக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மறவபட்டியிலிருந்து ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் தாரை, தப்பட்டையுடன் ஊர்வலமாக வந்து குளக்கரையில் உள்ள‌‌ கன்னிமார் மற்றும் கருப்பண்ணசாமி கோயிலில் சாமி கும்பிட்டனர்.

பின்னர் பொதுமக்கள் அரிவலை, வீசுவலை, சுருக்குவலை, தூண்டில் கூடை ஆகியவற்றுடன் குளத்திற்கு வந்தனர். சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஒரே சமயத்தில் குளத்தில் இறங்கி மீன் பிடித்தனர். கட்லா, ரோகு, புல்லு கெண்டை, விரால், குறவை, கெண்டை மீன் என பல்வேறு வகை மீன்களை பிடித்தனர். ஒவ்வொருவரும் ஒரு கிலோ முதல் 5 கிலோ வரை மீன்களை அள்ளிச் சென்றனர். 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக இங்கு மீன்பிடி திருவிழா நடைபெறவில்லை. இந்தாண்டு மீன்பிடி திருவிழா நடந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: