‘அக்னிபாதை’ திட்ட போராட்டத்தின் வன்முறையால் பீகாரில் ரூ.700 கோடி ரயில்வே சொத்து நாசம்: இதுவரை 138 எப்ஐஆர் பதிவு; 718 பேர் கைது

பாட்னா: ‘அக்னிபாதை’ திட்ட போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையால் பீகாரில் மட்டும் ரூ.700 கோடி ரயில்வே சொத்து நாசப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 138 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, 718 பேர் கைதாகி உள்ளனர். இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றக் கூடிய வகையில், ஒன்றிய அரசு இளைஞர்களுக்காக கொண்டுவந்துள்ள அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக பீகார் உட்பட 15க்கும் மேற்பட்ட மாநிலத்தில் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடந்தது.

ஆங்காங்கே ரயில்களுக்கு தீ வைப்பு போன்ற அசாம்பாவித சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. மேலும் சமூக வலைதளங்கள் மூலமாக, சில சமூக விரோதிகள் வதந்திகளை பொதுமக்கள் மத்தியில் பரப்பி, அவர்களை தூண்டிவிடும் வகையிலும், உடமைகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும், அமைதியை சீர்குலைக்கும் நோக்கிலும் செயல்பட்டு வருவதால், சில மாநிலங்களில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. கடந்த நான்கு நாட்களில் பீகாரில் மட்டும் போராட்டக்காரர்கள் 60 ரயில்களின் பெட்டிகளையும், 11 இன்ஜின்களையும் எரித்தனர்.

இதுமட்டுமின்றி, ரயில் நிலையங்களில் உள்ள கடைகளுக்கு தீ வைத்து எரித்தும், ரயில்வேக்கு சொந்தமான பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர். சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை போராட்டக்காரர்கள் எரித்துள்ளனர். மாநிலத்தில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பொது சொத்துகள் நாசப்படுத்தப்பட்டுள்ளன. பீகாரில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக மொத்தம் 138 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டு 718 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி மற்றும் வீடியோ காட்சிகள் மூலம் வன்முறையில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதுதவிர, ரயில்வே நிர்வாக தகவலின்படி, 60 கோடி பயணிகள் தங்களது முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்துள்ளனர். 300க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், ரயில்வேக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வ இழப்பு குறித்த தகவல்களை வெளியிடவில்லை.

Related Stories: