காவிரி மேலாண்மை ஆணைய தலைவரை கண்டித்து டெல்டாவில் வரும் 23ம் தேதி வீடுகள்தோறும் கருப்புக்கொடி: விவசாய சங்கங்கள் அறிவிப்பு

திருச்சி: காவிரி ஆணையத்தின் தலைவரை கண்டித்து வரும் 23ம் தேதி டெல்டா மாவட்டங்களில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது. தஞ்சை மாவட்டம் கல்லணையை நேற்று முன்தினம் ஆய்வு செய்த காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர், வரும் 23ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை திட்டம் குறித்து விவாதிக்கப்படும்.

விவாதிக்க எங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது என திட்டவட்டமாக கூறினார். இது டெல்டா விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி விவசாய சங்க தலைவர்கள் கூறிய கருத்துக்கள் வருமாறு: தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்: காவிரி மேலாண்மை ஆணைய தலைவரின் அறிவிப்பு உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். வரும் 23ம் தேதி ஆணையக் கூட்டத்தில் விவாதிப்பதற்கு அனுமதிக்கும் நிலையில் பெரும்பான்மை மாநிலங்களில் ஆதரவைப் பெற்று அணை கட்டுமான திட்டத்தை நிராகரிப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக கேரளாவின் ஆதரவை பெற முதல்வர் முன்வர வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் சட்ட விரோத நடவடிக்கையையும், ஒன்றிய அரசு மறைமுகமாக மேகதாது அணை கட்டுவதற்கு துணை போவதையும் கண்டித்து வரும் 23ம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி திட்ட அறிக்கை நகலை தீயிட்டு கொளுத்துவார்கள்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு: மேகதாது அணை கட்ட அனுமதிக்கும் அதிகாரம் ஆணையத்துக்கு இல்லை. ஒன்றிய அரசு அனுமதி அளிப்பதை தமிழக அரசு உச்சநீதிமன்றம் மூலம் தடுக்க வேண்டும். மேகதாது அணை கட்டப்பட்டால் மழைக்காலங்களில் தமிழகத்துக்கு வரும் உபரிநீர் தடுக்கப்படும். இதனால் உபரி நீரும் கிடைக்காமல் தமிழகம் பாலைவனமாகும். எனவே தமிழக அரசு, வரும் 23ம் தேதி நடக்கும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கேரள அரசின் ஆதரவை பெற்று திட்டத்தை நிராகரிக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் விரைவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: