தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சடலம் கட்ட துணி வாங்கி வரச் சொன்ன ஊழியர்கள்

* வீடியோ வைரலால் பரபரப்பு

* 2 பேர் சஸ்பெண்ட்

தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், சடலத்தை கட்டும் காடா துணி இல்லை என்று கூறி, வெளியில் இருந்து வாங்கி வருமாறு ஊழியர்கள் அனுப்பும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 2 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து, டீன் அமுதவல்லி நடவடிக்கை எடுத்துள்ளார். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, தினசரி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும், விபத்துகளில் இறந்தவர்கள் மற்றும் தற்கொலை செய்து கொண்டவர்களின் சடலங்கள், தினமும் பிரேத பரிசோதனை செய்யப்படுகின்றன. பிரேத பரிசோதனை முடிந்து, உடல்கள் காடா துணியால் கட்டி, பிளாஸ்டிக் கவர்களால் சுற்றி உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

இதனிடையே சடலங்களை பெற வரும் உறவினர்களிடம், காடா துணியை வெளியில் இருந்து வாங்கி வருமாறு, மருத்துவமனை ஊழியர்கள் அனுப்பி வைப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு சடலத்தை வாங்க வந்த உறவினர்களிடம், காடா துணியை வாங்கி வருமாறு ஊழியர்கள் பேசி அனுப்பும் வீடியோ, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுபற்றி மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது, சடலத்தை கட்டும் காடா துணி கடந்த சில மாதங்களாகவே இருப்பு இல்லை. அதனால், வெளியில் சென்று காடா துணி 8 மீட்டர் வாங்கி வருமாறு கூறினோம். அவர்களிடம் எந்த பணமும் கேட்பதில்லை. ஆனால், தவறாக வீடியோ பரப்பப்பட்டு வருகிறது என்றனர். இதுபற்றி தகவல் அறிந்த டீன் அமுதவல்லி, இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.

முதல்கட்ட விசாரணையில், காடா துணி வாங்கி வரும்படி சடலம் வாங்க வந்த உறவினர்களிடம் கூறியது தெரியவந்தது. இதையடுத்து டீன் அமுதவல்லி பிரேத பரிசோதனை கூடத்தில் பணியாற்றிய காமராஜ் (59), தமிழரசு (42) ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக விசாரிக்க, அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று டீன் கூறினார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி அரசு மருத்துவமனையில் போதுமான அளவு காடா துணி இருப்பு உள்ளது. பிரேத பரிசோதனை கூடத்தில் ஸ்டாக் இல்லை என்றால், நிர்வாகத்திடம் கூறி பெற்று பயன்படுத்தியிருக்கலாம்,’ என்றனர்.

Related Stories: