நுண்வழி அறுவை சிகிச்சை வசதி உள்ள முதல் அரசு மருத்துவமனை: ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு

தண்டையார்பேட்டை: ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று, பட்டப்படிப்பு நிறைவு செய்த 246 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் பேசியதாவது: ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி கடந்த 1938ம் ஆண்டு அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வருகிறது. தற்போது இங்கு 38 துறைகள் மற்றும் 1,661 படுக்கைகளுடன் இயங்கி வருகிறது.

 

பிறவியிலேயே இதயநோயால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு, முதன்முதலாக இங்கு 1948ம் ஆண்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. 1971ம் ஆண்டில் கை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து, இன்றுவரை ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைக்கு சிறந்த மருத்துவமனையாக விளங்கி வருகிறது. இது, ஓசோஃபேஜியல் மனோமெட்ரி வசதி கொண்டு வரப்பட்ட முதல் மருத்துவமனையாகும். மேலும், நுண்வழி அறுவை சிகிச்சை வசதி கொண்ட முதல் அரசு மருத்துவமனையாகும்.

இங்கு கடந்த ஓராண்டில் மருத்துவ மாணவிகளுக்கான உடற்பயிற்சி கூடம், ₹25 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம், முழு உடல் பரிசோதனை மையம், ₹25 லட்சத்தில் வலிதணிப்பு மையம், ₹50 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட குளிர்சாதன வசதியுடன் நூலகம் மற்றும் வெள்ளி விழா அரங்கம் போன்ற பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் முடிந்து திறந்து வைக்கப்பட்டு உள்ளது. மேலும், ஆட்டிசம் குழந்தைகளுக்கான உணர்திறன் ஒருங்கிணைப்பு பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதில் வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி, மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் இளைய அருணா, மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பாபு, ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பாலாஜி, மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் ஜமீலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: