5 நாள் போராட்டத்துக்கு பின் போர்வெல்லில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு: பாக்டீரியா தாக்கியதால் ஆபத்து

ஜாஞ்கிர்: சட்டீஸ்கரில் ஆழ்துளை குழாய் கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன், 5 நாட்களுக்கு பின் நேற்று உயிருடன் மீட்கப்பட்டான். சட்டீஸ்கரின் ஜாஞ்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள பிக்ரிட் கிராமத்தில் கடந்த 10ம் தேதி பிற்பகல் 2 மணியளவில் தனது வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்த ராகுல் சாஹூ என்ற 11 வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த 60 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதனை தொடர்ந்து அன்று மாலை சுமார் 4 மணியளவில் சிறுவனை மீட்கும் முயற்சிகள் தொடங்கின. தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.  

ஆழ்துளை குழாய் அருகிலேயே  இணை பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர், ஆழ்துளை குழாய் கிணற்றுக்குள் செல்ல சுரங்க வழி உருவாக்கப்பட்டது. 5 நாட்களாக நடந்த தீவிர முயற்சிக்கு பின் நேற்று முன்தினம் இரவு சிறுவன் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். 5 நாட்களாக ஆழ்துளை கிணற்றில் இருந்ததால், சிறுவனை பாக்டீரியா தாக்கி, உடலில் ரத்தம் முழுவதும் பரவியுள்ளது. இதனால், அவன் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த பாக்டீரியா காரணமாக, சிறுவனின் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: