திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி குடும்பத்தலைவிகளுக்கு வெகு விரைவில் ரூ.1,000 ஊக்கத்தொகை: நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தகவல்

மதுரை: குடும்பத்தலைவிகளுக்கு விரைவில் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். மதுரையில்  நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன்நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதிய நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) தயாரித்த பொருட்களை அரசுத்துறையில் வாங்கி பயன்படுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை செய்யப்பட்டது. அவரும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிறுவனங்களிடம் கொள்முதல் செய்வதால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். தமிழக பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடைய வாய்ப்பு ஏற்படும்.

தமிழகத்தில் இல்லாத புதிய வெளிநாட்டு நிறுவனங்களை இங்கு கொண்டு வரும் வகையில், அமெரிக்காவில் அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதுபோல ஆஸ்திரேலியாவிற்கும், தமிழகத்திற்கும் வர்த்தகம் வளர்க்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. வீடு தேடி ரேஷன் கார்டு, ஒய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியமும் வருவதற்காக தபால்துறையுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும். இதற்காக குடும்பத்தலைவிகள் குறித்த புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: