தஞ்சாவூர் அருகே சாமி ஊர்வலத்தில் மோதல் வீடுகள், கடை தீ வைத்து எரிப்பு: டிஎஸ்பி வாகனம் உடைப்பு

பாபநாசம்: தஞ்சாவூர் அருகே சாமி ஊர்வலத்தில் இரு தரப்பினரிடையே மோதல் எதிரொலியால் 3 வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. எஸ்ஐ படுகாயமடைந்தார். டிஎஸ்பி வாகனம் கண்ணாடி உடைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா ராஜகிரியில் அய்யனார் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 13ம்தேதி இரவு சாமி வீதிஉலா முக்கிய வீதிகளின் வழியாக வந்தது. அப்போது ராஜகிரி மெயின் ரோட்டில் வந்து போது, இருதரப்பினரிடையே பல்லக்கு தூக்குவதில் ஏற்பட்ட தகராறில் நடுரோட்டில் சாமியை இறக்கி வைத்துவிட்டு இரு தரப்பினரும் கற்களாலும், மூங்கிலாலும் தாக்கி கொண்டனர். இதில் காயம் அடைந்த 10பேர், பாபநாசம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் கோயில் அருகே நேற்றுமுன்தினம் இரவு கூடியிருந்த இரு தரப்பினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகள், கடை தீ வைத்து கொளுத்தப்பட்டது. தீ வைக்கப்பட்டதில் 3 வீடுகள், ஒரு கடை எரிந்து சாம்பலானது. மேலும் கல்வீச்சில் பாபநாசம் டிஎஸ்பி வாகன முன்பக்க கண்ணாடி உடைந்தது. இந்த சம்பவத்தில் கபிஸ்தலம் எஸ்ஐ ராஜ்குமாரின் மண்டை உடைந்ததால் பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தஞ்சாவூர் சரக டிஐஜி கயல்விழி தலைமையில் அதிரடிப்படை போலீசார்  ராஜகிரி கிராமத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டனர். இது குறித்து பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு  தரப்பை சேர்ந்த 10 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: