எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல திட்டம்; அனல் மின்நிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவு

சென்னை: எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிகு உய்ய அனல் மின் திட்ட பணிகளை  விரைந்து முடிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவிட்டுள்ளார். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிகு உய்ய அனல் மின் திட்டத்தின் செயலாக்கப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி, இயக்குனர்   (திட்டம்) எத்திராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி தொழில் துறையில் முன்னேற்றம் கண்டு வரும் தமிழகத்தின் எரிசக்தி தேவையின் தன்னிறைவை கருத்தில் கொண்டு கட்டுமானத்தில் இருக்கும் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிகு உய்ய  அனல் மின் திட்ட பணிகளை விரைந்து முடிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இத்திட்டத்தில் இரண்டு யூனிட் 660 மெகாவாட் என மொத்தம் 1,320 மெகாவாட் 2010ம் ஆண்டு கலைஞரால் அறிவிக்கப்பட்டது.  இத்திட்டம் மார்ச் 2018ம் ஆண்டில் பணிகள் முடிக்கப்பட்டு உற்பத்தியை தொடங்கியிருக்க வேண்டும். தற்போது 53 விழுக்காடு மட்டும் தான் பணிகள் முடிந்துள்ளது.  மீதமுள்ள பணிகளை விரைவாக முடித்து மின் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ரூ.7,800 கோடி மதிப்பிலான இந்த சிறப்பு திட்டம் 1,320 மெகாவாட் மின் உற்பத்தியை தொடங்குகின்றபோது  நம்முடைய மின் தேவை பூர்த்தி செய்யப்படும். 2010ல் தொடங்கப்பட்டு 2018ல் முடிக்க வேண்டிய  இத்திட்டம் நான்கு ஆண்டுகள் ஆகியும் முடிவுபெறவில்லை. இந்த ஒப்பந்தத்தை எடுத்துள்ள பெல்  நிறுவனத்திடம் பணியாட்களை அதிகப்படுத்தி பணிகளை மிக விரைவாக முடித்திட வேண்டும் என்று எடுத்து சொல்லியிருக்கிறோம். முதல்  யூனிட் மார்ச் 2024ல் உற்பத்தியை  தொடங்குவதற்காக  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜூன் 2024ல் மற்றொரு யூனிட் உற்பத்தியை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கக்கூடிய வகையில் பணிகள் விரைவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: