மணமேல்குடி அருகே தாழ்வாக தொங்கும் மின்கம்பியால் விபத்து அபாயம்-அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

அறந்தாங்கி : அறந்தாங்கியை அடுத்த கண்டிச்சங்காடு பிரிவில் இருந்து கம்பர்கோவில், கூம்பள்ளம், வெள்ளாட்டுமங்கலம், திருநெல்லிவயல், தினையாகுடி, மாவிளங்காவயல், கோபாலபுரம், பிராமணவயல், தர்மராஜன்வயல், சிங்கவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் கொண்டு செல்லும் மின்கம்பங்கள் இருந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீசிய கஜா புயலின் காரணமாக கண்டிச்சங்காடு பிரிவில் இருந்து மின்சாரம் செல்லும் மின்கம்பங்கள் ஒடிந்து விழுந்துவிட்டன.

 இதனால் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கண்டிச்சங்காட்டில் இருந்து கம்பர்கோவில் உள்ளிட்ட ஊர்களுக்கு வேறு பகுதி வழியாகச் சென்ற மின்கம்பங்கள் வழியாக மின்சாரம் வழங்கி வருகிறது. கஜா புயலின்போது இந்த மின்தொடர் வழியில் ஏராளமான மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் அந்த வழியில் இருந்த இரும்பு மின்கம்பங்கள் சேதமடையாமல் நிற்கின்றன. தற்போது இந்த மின்தொடர் வழி பயன்பாட்டில் இல்லாத நிலையில் வெள்ளாட்டுமங்கலம் அருகே அறந்தாங்கி-நிலையூர் சாலையின் இருபுறமும் சேதமடையாமல் 2 இரும்பு மின்கம்பங்கள் உள்ளன.

இந்த மின்கம்பங்களை இணைக்கும் வகையில் மின்கம்பிகளும் உள்ளன. இந்த மின்கம்பங்கள் மிகவும் தாழ்வாக பேருந்தின் மேல்கூரையில் உரசும்வகையில் உள்ளன. மேலும் லாரிகளில் சரக்கு ஏற்றிச் செல்லும்போது பயன்பாடு இல்லாமல் தாழ்வாக செல்லும் இந்த மின்கம்பியில் சரக்குகள் சிக்கி சேதமடைந்து வருகின்றன. தற்போது எந்தவித பயன்பாடும் இல்லாமல் வெள்ளாட்டுமங்கலம் அருகே சாலையின் இரு பக்கமும் தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளுடன் இருக்கும் இரும்பு மின்கம்பங்களால் விபத்துகள் நேரிடும் அபாயம் உள்ளது.

எனவே தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் உடனடியாக வெள்ளாட்டுமங்கலம் அருகே பயன்பாடு இல்லாத நிலையில் விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ள மின்கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: