கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை

புதுடெல்லி: சீனா விசா முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த வழக்கில் கூடுதல் விசாரணை மேற்கொள்வதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 263 சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் தொகையை முறைகேடாக பெற்றதாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி பூனம்-ஏ-பாண்டே தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 8ம் தேதி ஒத்திவைத்தார். இதற்கிடையே, ‘சீனா விசா முறைகேட்டு விவகாரத்தில் பல்வேறு கூடுதல் ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளது. எனவே, கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டதில் கூடுதல் வாதங்கள் மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அமலாக்கத்துறையின் இந்த கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதி பூனம்-ஏ-பாண்டே, வழக்கை நாளை கோடை விடுமுறைகால அமர்வில் பட்டியலிடுமாறு உத்தரவிட்டார்.

Related Stories: