கொள்ளிடம் பாசன வாய்க்காலில் தேங்கி கிடக்கும் கழிவுநீரால் நோய் தொற்று அபாயம்-நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குத்தவக்கரை கிராமத்தில் பிரதான தெற்கு ராஜன்பாசன வாய்க்காலில் உள்ளது.இதில் இருந்து கிளை வாய்க்காலாக பிரிந்து கொள்ளிடம், தைக்கால், சந்தபடுகை, உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சென்று அனுமந்தபுரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கலக்கும் பாசன வாய்க்கால் அனுமந்தபுரம் வாய்க்கால் ஆகும். சுமார் 3.5 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த பாசன வாய்க்கால் மூலம் சுமார் 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த வாய்க்கால் தற்பொழுது மூன்று கிலோமீட்டர் தூரம் பொதுப்பணித்துறையின் மூலம் தூர்வாரப்பட்டு உள்ளது.

ஆனால் கொள்ளிடம் ரயில் நிலையம் செல்லும் சாலையின் குறுக்கே கடந்து செல்லும் இந்த பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி ஓடுகள் உள்ளிட்ட அனைத்து வகையான உடைந்த பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. மேலும் அப்பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை நீரும் தொடர்ந்து தேங்கி உள்ளது. அப்பகுதியில் தொடர்ந்து தண்ணீர் முன்னேறிச் செல்ல முடியாதபடி வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கழிவு நீரும் சாக்கடை நீரும் ஒரே இடத்தில் பல மாதங்களாக தேங்கி கிடப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் கொள்ளிடம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த குடியிருப்புகளில் உள்ள தேங்கும் மழை நீரை வெளியேற்றும் வடிகாலாகவும் இந்த வாய்க்கால் இருந்து வருகிறது.

மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கொள்ளிடம் கடைமடை பகுதியை எட்டும் தருவாயில் உள்ளது. இந்த பகுதியை தூர்வாரினால் மட்டுமே தண்ணீர் வயல்களுக்கு சென்று சேரும். எனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனுமந்தபுரம் பாசன கிளை வாய்க்காலை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: