கண்மணி... அன்போட...குணா குகையில் குஷி செல்பி சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்

கொடைக்கானல் : வார விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். மிதமான குளிருடன் நிலவிய இதமான வானிலையை சுற்றுலாப்பயணிகள் வெகுவாக ரசித்தனர்.திண்டுக்கல் மாவட்டத்தின் பிரபல சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு வார விடுமுறை காரணமாக, சுற்றுலாப்பயணிகள் வருகை நேற்றும் அதிகமாக இருந்தது. நகரின் நுழைவிடமான வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில், சுற்றுலாப்பயணிகளின் வாகனங்களால் ஏற்பட்ட நெரிசல் காரணமாக போக்குவரத்து பாதித்தது. மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். ஏரியில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

மேலும், கொடைக்கானலில் நேற்று காலை முதலே இதமான சூழல் நிலவியது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது . இந்த இரு மாறுபட்ட சூழல்களையும், தூண்பாறை மற்றும் குணா திரைப்பட படப்பிடிப்பு நடந்த ‘குணா குகை’ பகுதிகளில் தவழும் மேக மூட்டம், இதமான குளிரை சுற்றுலாப்பயணிகள் வெகுவாக ரசித்து, செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

கொடைக்கானலில் வார விடுமுறை நாட்களில் கூடும் சுற்றுலாப்பயணிகளால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. அதுபோல், வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதியில்லாததால் பார்க்கிங் வசதியை ேமம்படுத்த வேண்டும் என சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வருகை இனிமேல் படிப்படியாக குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: