கேரளா வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் மீண்டும் நடமாட்டம்: போலீசார் தீவிர விசாரணை

திருவனந்தபுரம்: வயநாடு அருகே பானாசுரா பகுதியில் சீருடையணிந்த 2 பெண்கள் உள்பட 4 மாவோயிஸ்ட்கள் அங்குள்ள ஒரு வீட்டுக்கு சென்று அரிசி, பருப்பு மற்றும் பொருட்களை வாங்கிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் அடிக்கடி மாவோயிஸ்ட்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்படுவது வழக்கம்.

கடந்த 2 வருடங்களுக்கு முன் இப்பகுதியில் தமிழ்நாட்டை சேர்ந்த வேல்முருகன் என்ற மாவோயிஸ்டை போலீசார் சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை பானாசுரா மலைப்பகுதிக்கு அருகே சீருடை அணிந்த 2 பெண்கள் உட்பட நான்கு மாவோயிஸ்ட்கள் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகுதியில் ஏராளமான ரிசார்ட்டுகள் உள்ளன. இங்கு அடிக்கடி சுற்றுலா பயணிகள் வந்து தங்குவது வழக்கம்.

இந்த ரிசார்ட்டுகளில் பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் அங்குள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் அந்த வீட்டுக்கு வந்த மாவோயிஸ்ட்கள் தங்களுக்கு அரிசி மற்றும் உணவுப்பொருட்கள் வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதையடுத்து தொழிலாளர்கள் அவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி மற்றும் பொருட்களை கொடுத்தனர். பின்னர் சிறிது நேரத்திலேயே அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். இது குறித்து அறிந்த பானாசுரா போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

Related Stories: