சாலை ஆக்கிரமிப்பு, பார்க்கிங் வசதி இல்லாததால் போக்குவரத்து நெரிசலில் திணறும் குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி

தாம்பரம்: குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் துணிக்கடை, நகைக்கடை, ஓட்டல்கள், தியேட்டர் என ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் பெருகி வரும் சூழலில் சாலை ஆக்கிரமிப்பு மற்றும் முறையான பார்க்கிங் வசதி இல்லாததால் காலை, மாலை நேரங்களில் கடும் நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குரோம்பேட்டை பகுதி நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வரும் பகுதியாக உள்ளது. தி.நகரில் உள்ள பிரபல துணிக்கடை, நகைக்கடை உள்ளிட்டவை தற்போது குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலைக்கு வந்துவிட்டன. இதன் காரணமாக குடும்ப நிகழ்ச்சிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க, புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தங்களது குடும்பத்துடன் குரோம்பேட்டையில் உள்ள கடைகளுக்கு வந்து செல்கின்றனர்.

அதுமட்டுமின்றி, ஜிஎஸ்டி சாலையில் சினிமா தியேட்டர், பெட்ரோல் பங்க், பிரபல ஓட்டல்கள் உள்ளதால் சனி, ஞாயிறு மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் இந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. ஆனால், இங்குள்ள பெரும்பாலான கடைகள் மற்றும் ஓட்டல்களில் பார்க்கிங் வசதி இல்லாததால், இங்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை ஜிஎஸ்டி சாலையின் இருபுறங்களிலும் நிறுத்துகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் ஷேர் ஆட்டோக்கள் மற்றும் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றுவதற்காக சாலையிலேயே நிறுத்துகின்றனர்.

இதனால், கடும் நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கும் நிலை உள்ளது. குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் குரோம்பேட்டை பகுதியை கடந்து செல்ல, நீண்ட நேரம் ஆகிறது. நெரிசலில் சிக்கி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் விரைந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலையோரம் நிறுத்திவைக்கப்படும் வாகனங்களை அகற்றவும், ஷேர் ஆட்டோக்கள், ஆம்னி பேருந்துகளை சாலையில் நிறுத்தாமல் இருக்கவும், நடைபாதை கடைகளை அகற்றவும், முறையான பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தரவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘கோடை விடுமுறை முடிந்து திங்கட்கிழமை (இன்று) முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி, குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் உள்ள வணிக வளாகங்களில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு வரும் பொதுமக்கள் பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த பகுதியை கடந்து செல்ல நீண்ட நேரம் ஆவதால், பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட உயரதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் ஏற்படும் நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: