சென்னை மாநகராட்சி சிறப்பு முகாமில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி இலக்கு: மேயர் பிரியா தகவல்

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சியில் 2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி சார்பில் 30வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. திருவொற்றியூர் நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் நடந்த முகாமில், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமை வகித்தார். இதில், மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.

பின்னர் மேயர் பிரியா நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட தடுப்பூசி முகாம் தற்போது 30வது தடுப்பூசி முகாமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வார்டுகளிலும் 17 தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஓரிடத்தில் நிலையான முகமும், 16 இடங்களில் மொபைல் தடுப்பூசி முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 1 முதல் 200 வார்டுகளில் 1600 சுகாதார குழுக்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு வார்டுக்கு ஆயிரம் பேர் இலக்கை நிர்ணயித்து சென்னையில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை நடத்திய தடுப்பு முகாமில் முதல் தவணையில் 99% பேரும், இரண்டாவது தவணை செலுத்தி கொண்டவர்கள் 85% பேரும் உள்ளனர். 2வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அதிகமாக உள்ளதால், இந்த முகாமை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

கொேரானா தொற்று தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் கொரொனா நோய் தொற்று அதிகரித்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இருந்தாலும் மக்கள் அனைவரும் தங்கள் பாதுகாப்பிற்காக மாஸ்க் அணிய வேண்டும், சானிடைசர் உபயோகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முகாமில் மண்டல அலுவலர் சங்கரன், கவுன்சிலர்கள், கவிகணேசன், சரண்யா கலைவாணன், சிவக்குமார், சுசீலா ராஜா, பானுமதி சந்தர், உமா சரவணன் திமுக பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சி கணேசன், நிர்வாகிகள் எம்.வி.குமார், குமரேசன், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: