தமிழ்நாட்டில் மட்டுமே குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்ய ஒப்பந்தப்புள்ளி: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: வேறு மாநிலங்கள் அதிக விலை கொடுத்து நிலக்கரியை இறக்குமதி செய்கின்றபோது  தமிழ்நாட்டில் மட்டும் குறைந்த விலையில் ஒப்பந்தப்புள்ளி இறுதி  செய்யப்பட்டு அதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று வட சென்னை அனல் மின் திட்டம் நிலை-3ல் பிரதான இயந்திரங்கள் கொதிகலன், சுழலி, மின்னாக்கி மற்றும் கட்டுப்பாட்டு அறை, நீர் குளிரூட்டும் கோபுரம். குளிர்ந்த நீர் கொண்டு செல்லும் பைப்கள் அமைக்கும் பணி, 765 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் ஆகிய கட்டுமான பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விவரங்களைக் கேட்டறிந்தார்.  

பின்னர், நேரடி ஆய்விற்குப் பின் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அதில் திட்டப் பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இந்த ஆண்டுக்குள் பணிகள் நிறைவுற்று மின் உற்பத்தியை தொடங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், திட்டத்தின் மற்ற இதர பணிகளான கரி கையாளும் அமைப்பு, சாம்பல் கையாளும் அமைப்பு, கடல்நீரை குடிநீராக்கும் அமைப்பு ஆகியவற்றை கூட்ட அரங்கில் விசாரணை மேற்கொண்டார். இதேபோல், அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு திட்டத்தை விரைந்து முடிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வட சென்னை அனல்  மின் நிலைய நிலை 3 முத்தமிழறிஞர் கலைஞரால் 2010ம் ஆண்டு 800 மெகாவாட் அளவிற்கு அனல் மின் நிலையத்தின் திட்டம் அறிவிக்கப்பட்டது. 2019ம் ஆண்டு இத்திட்டப் பணிகள் முடிந்து உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும், இத்திட்டம் குறிப்பிட்ட காலத்தில் நிறைவு பெறவில்லை. முதலமைச்சர் மிக விரைவாக இந்தப் பணிகளை முடித்து உற்பத்தி தொடங்க வேண்டும் என்று வாரியத்திற்கு உத்தரவிட்டார். அதன்படி, பணிகள் விரைவுபடுத்தப்பட்டு ரூ.8,723 கோடி மதிப்பிலான திட்டம் 83 விழுக்காடு பணிகள் இன்றுவரை நிறைவு செய்யப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் பணிகள் 6 மாத காலத்தில் முழுவதுமாக நிறைவு செய்து டிசம்பர் மாத இறுதிக்குள் வணிகரீதியாகத் தொடங்க பணிகள் நடைபெற்றுவருகின்றன.

தமிழகத்தின் மின் தேவை 14,500 மெகாவாட் என்ற நிலை மாறி 16,500 மெகாவாட் அளவிற்கு தேவை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப நாம் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அது தொடர்பாக விநியோகத்திற்கான கட்டமைப்பையும் அடுத்த 5 ஆண்டுகளில் 6,220 மெகாவாட் அளவிற்கு கூடுதலாக மின்சார வாரியத்தின் சொந்த உற்பத்தி நிறுவு திறன் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பாய்லர் பணி மற்றும் ஒரு சில பணிகள் தான் நிலுவையில் உள்ளது. இது 6 மாதக் காலத்திற்குள் முடிவடைந்துவிடும். முதலமைச்சர் இத்திட்டத்தினை டிசம்பர் மாதம் தொடங்கிவைப்பார்.

முதலமைச்சர் நிலக்கரி தட்டுப்பாடு வருவதற்கு முன்பாகவே எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக டெண்டர் சர்வதேச அளவில் கோரப்பட்டு இறக்குமதிக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. வேறு மாநிலங்கள் அதிக விலை கொடுத்து நிலக்கரியை இறக்குமதி செய்கின்றபோது தமிழ்நாட்டில் மட்டும் குறைந்த விலையில் ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு அதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் தற்போது நிலக்கரி இருப்பு உள்ளது. இவ்வாறு கூறினார். ஆய்வின் போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர்(திட்டம்) ஆர்.எத்திராஜ், இயக்குநர் (உற்பத்தி) எழினி மற்றும் உயர் அலுவலர்கள்  உடனிருந்தனர்.

Related Stories: