வெளிநாட்டில் வசிக்கும் சகோதரர் பெயரில் போலி கையெழுத்திட்டு அதிமுக கூட்டுறவு வங்கி தலைவர் மோசடி: ராஜேஸ்குமார் எம்பி பேட்டி

நாமக்கல்: வெளிநாட்டில் வசிக்கும் சகோதரர் பெயரில் போலி கைகெயழுத்திட்டு அதிமுக கூட்டுறவு வங்கித்தலைவர் பயிர்க்கடன் பெற்று மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளதாக ராஜேஸ்குமார் எம்பி தெரிவித்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் எம்பி நாமக்கல்லில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அதிமுகவினர் கூட்டுறவு சங்கங்களில் தலைவர் மற்றும் நிர்வாக குழுவில் இடம் பெற்றனர்.

அவர்கள் பல்வேறு வழிகளில் மோசடி செய்துள்ளது தொடர்ந்து அம்பலமாகி வருகிறது. மல்லசமுத்திரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன், கவரிங் நகைகளை வைத்து நகைக் கடன் பெற்று அதிமுகவினர் மோசடி செய்தது தெரியவந்தது. தற்போது மோகனுார் அருகே ஆரியூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், தலைவர் பொறுப்பில் உள்ள அதிமுகவை சேர்ந்த மணி என்பவர் நூதன முறையில், பயிர்க்கடன் பெற்று மோசடி செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.

இதுகுறித்து மோகனூர் ஒன்றிய திமுக பொறுப்பாளர் நவலடி ஆதாரத்துடன் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளரிடம் புகாரளித்தார். இதையடுத்து கூட்டுறவுத்துறை அதிகரிகள் நடத்திய விசாரணையில் ஆரியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மணியின் மோசடி உண்மை என்பது தெரியவந்துள்ளது. மணி அதிமுக ஒன்றிய அவைத்தலைவராக இருக்கிறார். இவர், லண்டனில் வசிக்கும் தனது சகோதரர் சுப்பிரமணியனின் கையெழுத்தை போலியாக போட்டு, அவரது பெயரில் உள்ள அடங்கல் ஆவணங்களை வங்கியில் கொடுத்து ரூ.1.60 லட்சம் பயிர்க்கடன் பெற்றுள்ளார்.

தற்போது அந்த பயிர்க்கடன் அரசின் அறிவிப்பின்படி தள்ளுபடியாகிவிட்டது. கூட்டுறவு வங்கி தலைவர் மணி ஏற்கனவே 2019ல், தன்னுடைய சகோதரர் பெயரில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வட்டியில்லாத கடனாகவும் பெற்றுள்ளார். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் பொறுப்பு வகிக்கும் அதிமுகவினர் பலர் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கு இதுவும் ஒரு அத்தாட்சியாகும். ஆரியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் மணி செய்துள்ள பயிர்க்கடன் மோசடி குறித்து தீவிர விசாரணை நடத்தி இதற்கு துணை போன அதிகாரிகள் மீதும் இணைப்பதிவாளர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு ராஜேஸ்குமார் எம்பி தெரிவித்தார்.

Related Stories: