பல்வேறு துறைகளில் பணியாற்றி 5 ஆண்டு பணி முடித்த கண்காணிப்பாளர்கள் உதவி கணக்கு அலுவலர்களாக கருவூலத்துறையில் நியமனம்: காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: தமிழக அரசின் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறைகள் உட்பட பல்வேறு துறைகள் மூலம் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு துறைகள் சார்பிலும் திட்ட மதிப்பீடு தயார் செய்வது, ஒப்பந்தப்புள்ளி கோருதல் போன்ற பணிகளில் கண்காணிப்பாளர்கள் நிலையில் ஆனா அதிகாரிகள் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், ஒவ்வொரு திட்டத்திற்கான பில் தொகைகளுக்கான பணப்பட்டுவாடா, ஊழியர்கள் சம்பள பணிகளையும் இந்த அதிகாரிகள் தான் கவனித்து வருகின்றனர்.

அவர்கள் தான், தமிழக அரசின் கருவூலம் மற்றும் கணக்குத்துறைகளுக்கு அதன் விவரங்களை அனுப்பி வைப்பார்கள். அதன்பிறகு, கருவூலத்துறை சார்பில் நிதி விடுவிக்கப்படுவது வழக்கம். ஆனால், சமீபகாலமாக கருவூலம், மற்றும் கணக்கு துறைகளில் காலி பணியிடங்களால் இப்பணிகளை விரைந்து முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  இதை தொடர்ந்து கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆணையர் வெங்கடேஷ் அனைத்து துறை  உயர் அதிகாரிகளுக்கும் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.

அதில், ஐந்து ஆண்டுகள் கண்காணிப்பாளர் பணி முடித்தவர்களை உதவி கணக்கு அலுவலராக நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அதற்கு தகுதியான கண்காணிப்பாளர்கள் பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதன்பேரில், பொதுப்பணி, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறைகள் சார்பில் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கண்காணிப்பாளர் நிலையில் உள்ள தமிழ்நாடு மாநில கருவூலம் மற்றும் கணக்குத்துறையில் உதவி கணக்கு அலுவலர் பணிக்காக  2020-22ம் ஆண்டிற்கான பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ள நபர்கள் எவரேனும் இருப்பின் அவர்கள் விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் கருவூலத்துறையில் காலி பணியிடங்களை நிரப்புவதன் மூலம் ஊழியர்களின் சம்பளம், டெண்டருக்கான பணப்பட்டுவாடா பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: