ஒன்றிய அரசின் பழிவாங்கும் போக்கை கண்டித்து நாளை மறுநாள் காங். சார்பில் ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளை யங் இந்தியா நிறுவனம் வாங்கியது ஒரு சாதாரண வர்த்தக நடவடிக்கைதான். இதில் நம்பிக்கை மோசடிக்கோ, குற்றச் சதிக்கோ அல்லது யாரையும் ஏமாற்றியிருப்பதற்கோ இடமில்லை. தனிப்பட்ட நிறுவனத்தின் பணப்பரிமாற்றங்கள் மீது சம்பந்தமில்லாத நிலையிலும், மூன்றாம் நபருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத சூழலில் எவரும் கேள்வி எழுப்ப முடியாது என ஏற்கெனவே பல நீதிமன்றங்களில் அளிக்கப்பட்ட தீர்ப்புகள் முன்னுதாரணமாக உள்ளன.

இது காங்கிரஸ் கட்சியின் மீது தொடுக்கப்பட்ட அப்பட்டமான பழிவாங்கும் போக்கு. பாஜகவின் இத்தகைய மிரட்டலைக் கண்டு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அஞ்சாது. பா.ஜ.க.வின் மக்கள் விரோதப் போக்கை அம்பலப்படுத்தும் பணியை காங்கிரஸ் தொடர்ந்து செய்யும். மத்தியில் நடைபெற்று வரும் மோடி ஆட்சியை எதிர்த்து கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வரும் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரின் செயல்பாட்டை முடக்குவதற்காக பழிவாங்கும் நோக்கத்துடன் அமலாக்கத்துறை மூலம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது அப்பட்டமான ஜனநாயக சட்டவிரோத நடவடிக்கையாகும்.

ஒன்றிய பாஜக அரசின் இத்தகைய பழிவாங்கும் போக்கை கண்டிக்கும் வகையில், எனது தலைமையில், சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலை பகுதியில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பாக வருகிற திங்கட்கிழமை (நாளை மறுநாள்) காலை 11 மணியளவில் காங்கிரஸ் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். இதில் தமிழக காங்கிரசின் முன்னணித் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், செயல் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்கின்றனர்.

Related Stories: