கோமா நிலையில் சின்னாளபட்டி ஜிஹெச்

*‘டைமிங்’ இல்லாத டாக்டர்களால் நோயாளிகள் அவதி

*மழை பெய்தால் குடையுடன் செல்லும் அவலம்

சின்னாளபட்டி : சின்னாளபட்டி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் முறையாக வராததால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். கட்டிடங்கள் பழுதாகி கிடப்பதால் மழை பெய்தால் குடையுடன் சென்றே சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. சின்னாளபட்டியில் சுமார் 50 ஆயிரம் பேர்  வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் நலன் கருதி 1972ம் ஆண்டு துவங்கப்பட்ட அரசு  ஆரம்ப சுகாதார நிலையம் இத்தொகுதியின் எம்எல்ஏவும், கூட்டுறவுத்துறை  அமைச்சர் ஐ.பெரியசாமியின் சீரிய முயற்சியினால் ஐஎஸ்ஓ 9001-2008 தரச்சான்று  பெற்று 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக  மாற்றப்பட்டது.

அதன்பின் ஆட்சி மாற்றத்திற்கு பின் கடந்த 10 ஆண்டுகளாக  இம்மருத்துவமனை கண்டுகொள்ளப்படவே இல்லை. தற்போது சரிவர டாக்டர்கள் வராததால்  இம்மருத்துவமனை ‘கோமா’ நிலையில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஞாயிற்று  கிழமைகளில் எந்த ஒரு மருத்துவரும் வருவதே கிடையாது. மருந்தாளுநர் மட்டும்  வந்து நோயாளிகளுக்கு மாத்திரை, மருந்துகளை வழங்கி வருகின்றனர். இதேபோல்  மற்ற நாட்களில் காலை நேரங்களில் மருத்துவர்கள் தாமதமாக வருவதால் நோயாளிகள்  சிகிச்சை பெற முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில நோயாளிகள்  மயக்கமடைந்து மருத்துவமனை முன்பே படுத்து விடுகின்றனர்.

இதுகுறித்து  சின்னாளபட்டியை சேர்ந்த சமூகஆர்வலர் திருநாவுக்கரசு கூறுகையில், ‘ஆத்தூர்  தொகுதியில் மிகப்பெரிய ஊர் சின்னாளபட்டி. கூட்டுறவுத்துறை அமைச்சர்  ஐ.பெரியசாமி 10 வருடத்திற்கு முன்பு நவீன சிகிச்சை அளிக்கக்கூடிய  அரங்கத்துடன் மருத்துவமனையில் வசதி ஏற்படுத்தி கொடுத்தார். ஆனால் கடந்த  அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகள் முழுவதும் இந்த மருத்துவமனை கோமா நிலையில்  செயல்பட்டு வருகிறது.

முறையாக மருத்துவர்கள் வருவதில்லை. அப்படியே  வந்தாலும் ஒரு மணிநேரம் இருந்து விட்டு சென்று விடுகின்றனர். இதனால்  பொதுமக்கள் தனியார் மருத்துவமனையை தேடி செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.  சின்னாளபட்டி பஸ்நிலைய சாலையில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில்  முறையான அறிவிப்பு பலகை வைக்காததால் வெளியூர் நோயாளிகள்  வழி தெரியாமல் அலைச்சலுக்குள்ளாகின்றனர்.

முகப்பில் ஆர்ச்  வைத்து மருத்துவமனைக்கு செல்லும் வழி என அறிவிப்பு செய்ய வேண்டும். 1972ம்  ஆண்டு கட்டப்பட்ட கட்டிடம் என்பதால், மழை பெய்தால் டாக்டர் அறையை தவிர  அனைத்து அறைகளிலும் மழைநீர் ஒழுகுகிறது. இதனால் மழை பெய்தால் குடையுடன்  தான் மருத்துவமனைக்கு வர வேண்டியுள்ளது. எனவே அனைத்து கட்டிடங்களிலும்  மராமத்து பணி செய்ய வேண்டும். மருத்துவமனையின் உள்ளே பாழடைந்த கட்டிடங்களை சுற்றி புதர் மண்டி கிடக்கிறது.

இதனால் மருத்துவமனை வளாகம் பாம்புகள் கூடாரமாக மாறி வருகிறது. எனவே மருத்துவமனை வளாகத்தில் புதர்களை அகற்றி சுற்றியிலும்  பேவர் பிளாக்  கற்கள் சாலை அமைத்து, மின்சார விளக்குகள் வசதி செய்து கொடுக்க வேண்டும்.  பூட்டி கிடக்கும் பிரசவ வார்டுகளை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர  வேண்டும். இதேபோல் மருத்துவர்கள் முறையாக பணிக்கு வர செய்வதோடு 24 மணிநேர  சிகிச்சைக்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: