புதுக்கோட்டை அருகே பைக்குகள் மோதல்: 2 வியாபாரிகள் பலி-கார் விபத்தில் தொழிலாளி பலி: 5 பேர் படுகாயம்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பூ வியாபாரிகள் 2 பேர் உயிரிழந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள வளதாடிப்பட்டியை சேர்ந்தவர் மாயாண்டி (55). கீரனூர் அருகே ஈச்சங்காட்டை சேர்ந்தவர் சண்முகம் (58). இருவரும், கீரனூரில் பூக்கடை வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாயாண்டியும், சண்முகமும் நார்த்தாமலை அருகே உள்ள சத்தியமங்கலத்தில் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மீண்டும் பைக்கில் கீரனூர் நோக்கி வந்து கொண்டு இருந்தனர். அப்போது குளத்தூரை தாண்டி வந்த போது, கீரனூரில் இருந்து புதுக்கோட்டையை நோக்கி புத்தாம்பூரை சேர்ந்த கருப்பையா(45) ஓட்டி வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.

தகவலறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். காயமடைந்த மாயாண்டி, சண்முகம், கருப்பையா ஆகிய 3 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி மாயாண்டி, சண்முகம் இறந்தனர். கருப்பையாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருப்பையா உப்பிலியக்குடி கால்நடை மருத்துவனையில் உதவியாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து கீரனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வடவளாம் அருகே உள்ள கதுவாரிப்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன் செல்லமுத்து (25). இவர், லோடுவேன் மூலம் தினசரி திருச்சி மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளை புதுக்கோட்டைக்கு ஏற்றி வருவது வழக்கம். இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல் திருச்சியில் இருந்து காய்கறிகளை ஏற்றி கொண்டு புதுக்கோட்டை நோக்கி வந்துள்ளார். அப்போது நார்த்தாமலை அருகே உள்ள நெடுஞ்சேரி பகுதியில் வந்தபோது எதிரே ராமநாதபுரத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் மீது மோதியுள்ளது. இதில் செல்லமுத்து ஓட்டி வந்த வேன் சாலையிலேயே கவிழ்ந்தது.

காரும் பலத்த சேதடைந்தது. இதில் பலத்த காயமடைந்த செல்லமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் வந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த காஜா உசேன்(37), சையது இப்ராஹூம்(27) உள்ளிட்ட 5 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளனூர் போலீசார் இறந்த செல்லமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காயமடைந்தவர்களயும் சிகிச்சைக்காக மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விபத்துக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

Related Stories: