பகுதி நேர வேலை வாங்கி தருவதாக ஐஐடி மாணவியிடம் ரூ.1.46 லட்சம் மோசடி: ஆசாமிக்கு வலை

சென்னை: பகுதி நேர வேலை வாங்கி தருவதாக சென்னை ஐஐடி மாணவி ஒருவரிடம் ₹1.54 லட்சம் மோசடி செய்த நபரை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சரிதா தல்லூறு (21). சென்னை ஐஐடியில் கெமிக்கல் இன்ஜினியரிங் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர், பகுதி நேர வேலை செய்வதற்காக, சமூக வலைதளங்களில் வேலை தேடி வந்தார். அப்போது ஆன்லைன் மூலம் தாவு நிதிஷ் ரெட்டி என்பவர் அறிமுகமானார். அவர், சரிதா தல்லூறுக்கு பெரிய நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளார். அதற்காக முன்பணமாக ₹1.50 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், சரிதாவின் வாட்ஸ்அப் எண்ணில், ‘‘நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு இருமடங்கு வட்டி மற்றும் வேலை தரப்படும்,’’ என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

அதை நம்பிய சரிதா, தான் செலவுக்கு வைத்திருந்த ₹96 ஆயிரத்தை போன் பே மூலம் தாவு நிதிஷ் ரெட்டிக்கு அனுப்பியுள்ளார். அதோடு இல்லாமல் தன்னுடன் படிக்கும் நண்பர்களிடம் ₹50 ஆயிரம் கடன் வாங்கி அதையும் செலுத்தியுள்ளார்.

ஆனால் ₹1.46 லட்சம் செலுத்தியும் சரிதாவுக்கு வேலை கிடைக்கவில்லை. இதுகுறித்து தாவு நிதிஷ் ரெட்டியிடம் போன் செய்து கேட்ட போது சரியான பதில் இல்லை. மேலும், அதன் பிறகு அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சரிதா கடும் மன வேதனையில் இருந்தார். இதற்கிடையே கொடுத்த கடனை நண்பர்கள் சரிதாவிடம் கேட்டு வந்தனர்.

பின்னர் வேறு வழியின்றி சம்பவம் குறித்து மயிலாப்பூர் காவல் மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார், தாவு நிதிஷ் ரெட்டியின் செல்போன் எண் மற்றும் வங்கி கணக்குகளை வைத்து மோசடி நபரை தேடி வருகின்றனர்.

Related Stories: