சென்னை: துறைமுகத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலின் குடமுழுக்கு விழா நேற்று கோலகலமாக நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சென்னை துறைமுகம் தங்க சாலையில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், அறநிலையத் துறை கட்டுபாட்டில் உள்ளது. இக்கோயிலில், குடமுழுக்கு நடத்தி 12 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், ஆகம விதிப்படி மீண்டும் குடமுழுக்கு நடத்த திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, ஜூன் 10ம் தேதி குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி, கடந்த 8ம் தேதி காலை 9 மணியளவில் மஹா கணபதி ஹோமம் பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, நவகிரக ஹோமம் மற்றும் கோ மாத பூஜை நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு வாஸ்து சாந்தி அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் முதல் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி, உபசாரம் தீபாராதணை நடைபெற்றது. 2ம் நாளான 9ம் தேதி காலை 8.30 மணியளவில் 2ம் கால பூஜை நடந்தது. தொடர்ந்து, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி தீபாராதணை மற்றும் அஷ்ட பந்தனம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு 3ம் கால யாக பூஜை, தத்துவார்ச்சனை, ஸ்பர்ஷாஹூதி, உபசாரம் தீபாராதணை நடைபெற்றது.
