ஜெயங்கொண்டம் நிலக்கரி மின்திட்டத்துக்கு கையகப்படுத்திய நிலங்களை திரும்ப வழங்க முதல்வர் உத்தரவு; அமைச்சர் சிவசங்கர் நன்றி

சென்னை: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 1990ம் ஆண்டு, ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்ட பணிகள் துவங்கின. இதற்காக ஜெயங்கொண்டம் உள்பட 13 கிராமங்களில் 8,373 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அதற்கு குறைவான இழப்பீட்டு தொகையை அரசு நிர்ணயித்ததால், நீதிமன்றத்தில் 3,500க்கும் மேற்பட்ட நில உரிமையாளர்கள் உள்பட கிட்டத்தட்ட 10,000 வழக்குகள் பதியப்பட்டன. பின்னர் 1999ம் ஆண்டில் கலைஞர் முதல்வராக இருந்தபோது, நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த எனது தந்தை மறைந்த எஸ்.சிவசுப்பிரமணியன் தலைமையில் நில உரிமையாளர்களுடன் முதல்வர் நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக அமைந்தது.

இதற்கு நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த மறைந்த எனது தந்தை எஸ்.சிவசுப்ரமணியனும் உறுதுணையாக இருந்தார். பின்னர் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியின்போது, ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதையடுத்து ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்ட நிலம் கையகப்படுத்துதல் குறித்த வழக்குகளை விசாரிக்க 2 சிறப்பு நீதிமன்றங்கள் ஏக்கருக்கு ₹15 லட்சம் என இழப்பீடு நிர்ணயித்தது. இதைத் தொடர்ந்து, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் மூலமாக ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்தை துவங்குவதற்கு அப்போதைய ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா நடவடிக்கை எடுத்தார். எனினும், அதிமுக ஆட்சியின் மெத்தனத்தால், தங்கள் நிலத்துக்கான இழப்பீட்டு தொகை கிடைக்காமலும், அதன்மீதான உரிமை இல்லாமலும் மக்கள் தவித்தனர்.

பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த ஒரே வருடத்தில், கையகப்படுத்திய நிலங்களை அதன் உரிமையாளர்களிடம் திரும்ப வழங்க உத்தரவிட்டார். அவர் சொன்னதை நிறைவேற்றி காட்டியுள்ளார். மேலும் உரிமையாளர்களுக்கு நிலங்களை திரும்ப வழங்கியதோடு, அதற்காக அரசு வழங்கிய இழப்பீட்டு தொகையை திரும்ப வழங்க வேண்டாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது, வரலாற்றில் இல்லாத சாதனையாகும். இதற்காக ஜெயங்கொண்டம் பகுதி மக்களின் சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

Related Stories: