பிக்கட்டி-ஊட்டி சாலையில் பாலம் கட்டும் பணிகள் நிறைவு கனரக போக்குவரத்து மீண்டும் துவங்கியது

மஞ்சூர்: மஞ்சூர் அருகே பிக்கட்டி ஊட்டி சாலையில் கரும்புள்ளி பகுதியில் புதிய பாலம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து மீண்டும் கனரக வாகனப் போக்குவரத்து துவங்கியது. நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து தொட்டகம்பை, பிக்கட்டி, எடக்காடு பிரிவு, எமரால்டு வழியாக ஊட்டிக்கு சாலை வசதி உள்ளது.இந்த வழி தடத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளதால் ஊட்டி மற்றும் மஞ்சூர் பகுதிகளில் இருந்து தினசரி ஏராளமான அரசு பஸ்கள், தனியார் மற்றும் சுற்றுலா வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையில் கட்லாடா மற்றும் கரும்புள்ளி என்ற இடங்களில் இரண்டு சிறிய பாலங்கள் அமைந்துள்ளது. பிக்கட்டி சுற்றுவட்டார கிராமத்தினர் மஞ்சூர் பகுதிக்கு சென்று வர வேண்டுமென்றால் கட்லாடா பாலத்தை கடந்தும் இதேபோல் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல கரும்புள்ளி பாலத்தை கடந்து சென்று வரவேண்டியுள்ளது.

மேற்படி இரண்டு பாலங்களும் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலானதால் பழுதடைந்த நிலையில் பலமிழந்து போனது. இதனால் இந்த பாலங்கள் மீது செல்லும் அரசு பஸ்கள் முதல் அனைத்து கனரக வாகனங்களும் மிகுந்த எச்சரிக்கையோடு இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கரும்புள்ளி பாலம் மிக குறுகலாக உள்ளதுடன் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த பாலத்தை சீரமைத்து சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுவட்டார கிராம மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தார்கள்.

இதை தொடர்ந்து நெடுஞ்சாலைதுறை சார்பில் கரும்புள்ளி பகுதியில் புதிய பாலம் அமைத்து சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து பாலம் கட்டும் பணிகள் துவக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தீவிரமாக நடைபெற்று வந்தது. பாலம் அமைக்கும் பணிகள் காரணமாக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்படும் லாங் பஸ்கள் உள்பட கனரக வாகனங்கள் தற்காலிகமாக இச்சாலையில் இயக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. பாலம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் கனரக வாகனங்கள் பாலத்தின் வழியாக இயக்க அனுமதிக்கப்பட்டது. இதேபோல் மஞ்சூர் சாலையில் உள்ள கட்லாடா பாலத்தையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: