பஸ் பழுதானதால் அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதம்: ஆம்பூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு

ஆம்பூர்: ஆம்பூர் பஸ் நிலையத்தில் பழுதான பஸ்சில் பயணம் செய்த பயணிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்ததால் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சென்னையில் இருந்து பெங்களூருக்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. ஆம்பூர் அடுத்த பள்ளிகொண்டா டோல்கேட் அருகே வந்தபோது பஸ்சில் திடீரென கோளாறு ஏற்பட்டது. பின்னர்  பஸ் டிரைவர் பஸ்சை ஆம்பூருக்கு ஓட்டி வந்தார். பின்னர், ஆம்பூர் பஸ் நிலையத்தில் பஸ்சில் பயணம் செய்த பெங்களூரு, ஓசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த பயணிகளை இறக்கி விட்டனர். சற்று நேரத்தில் ஆம்பூர் போக்குவரத்து பணிமனையில் ரிப்பேர் செய்து வருவதாக கூறி பஸ் டிரைவர் மற்றும் நடத்துனர் புறப்பட்டுச் சென்றனர்.

பின்னர் கோளாறை சரிசெய்து ஆம்பூர் பஸ் நிலையம் வந்தபோது மீண்டும் அந்த பஸ் ரிப்பேர் ஆனது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மேலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாங்கள் காத்துக் கிடப்பதாகவும், வேறு பஸ்களில் தங்களை மாற்றி அனுப்பி இருந்தால் இந்நேரம் நாங்கள் பாதி தூரத்தை கடந்து இருப்போம் என கூறியும், இரவு நேரத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களை அழைத்துக்கொண்டு செல்வது தங்களுக்கு கடினமாக உள்ளதாகவும் கூறி பலர் அங்கிருந்த போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பஸ் டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு இருந்த பஸ் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் அந்த வழியாக பெங்களூர் செல்லும் பஸ்களில், காத்திருந்த பயணிகள் சிறு சிறு குழுக்களாக பிரித்து போலீசார் அனுப்பி வைத்தனர் .இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: