நல்லாத்தூர் ஊராட்சியில் வீடு, வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்: ஜமாபந்தியில் தலைவர் பிரமிளா சிவா கோரிக்கை

திருக்கழுக்குன்றம்:    திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமா பந்தியில் ஜமாபந்தி அலுவலர் சீதாவிடம் நல்லாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா சிவா கோரிக்கை மனு அளித்தார். அம்மனுவில், நல்லத்தூர் ஊராட்சியில் நல்லாத்தூர், பொம்மராஜபுரம், கொந்தக்காரிகுப்பம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட  குடும்பங்களை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சாலையோரம் குடியிருந்ததால் அது அரசு புறம்போக்கு இடம் என்றும் அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.ஆனால், ஒரு சிலருக்கு மட்டும் கண்துடைப்புக்காக மாற்று இடம் கொடுத்து விட்டு பெரும்பாலானோருக்கு சுமார் 6 ஆண்டுகளை கடந்தும் இதுவரை மாற்று இடம் வழங்காமல் உள்ளனர். எனவே, அந்த மக்களுக்கு உடனடியாக மாற்று இடம் வழங்க வேண்டும். அதேப்போல், நல்லாத்தூர் கிராமத்தில் சர்வே எண் 196ல் அடங்கிய கிராம நத்தம் வீட்டு மனையில் 53 குடும்பங்களை சேர்ந்தவர்கள் 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அவர்களுக்கான உரிய பத்திரங்கள் இருந்தும் வீட்டு  மனைப்பட்டா இல்லாததால் அரசின் சலுகைகள் கிடைக்கப்பெறாமல் அவதிப்படுகின்றனர். எனவே, அவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்றும் தலைவர் பிரமிளா சிவா கோரிக்கை மனுவில் தெரிவித்திருந்தார்.

Related Stories: