உலோக பொருட்கள் கிடைத்த நிலையில் மணல் குவியலை அகற்றியபோது மேலும் 4 சாமி சிலைகள்: வலங்கைமான் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைப்பு

வலங்கைமான்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த பூந்தோட்டம் ஊராட்சி சாத்தனூரை சேர்ந்தவர் வெங்கடேசன் (55). இவர் ஆலங்குடி சந்தைவெளியில் வீடு கட்டுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடம் வாங்கினார். அதில் வீடு கட்டுவதற்காக கடந்த மே 18ம் தேதி மாலை ஜேசிபி இயந்திரத்தால் பள்ளம் தோண்டியபோது சாமி சிலைகள் உள்பட 30க்கும் மேற்பட்ட உலோக பொருட்கள் சிறிய அளவில் இருந்தது கண்டறியப்பட்டது.

பின்னர் வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட பொருட்களை திருவாரூர் தொல்லியல் துறை காப்பாட்சியர் மருதுபாண்டியன் ஆய்வு செய்தார். அவை அனைத்தும் 13ம் நூற்றாண்டை சேர்ந்தவை என்றும், மதிப்பு சுமார் ஒரு கோடி இருக்கும் எனவும் தெரிய வந்தது. தோண்டப்பட்ட மண் அப்பகுதியில் குவியலாக வைக்கப்பட்டிருந்தது. அந்த மண் குவியலை நேற்று அப்புறப்படுத்தியபோது சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள பெருமாள் சிலை மற்றும் ஒரு அடி உயரம் கொண்ட பூமாதேவி உள்ளிட்ட 2 பெண் தெய்வங்கள் சிலை மற்றும் 15 சென்டி மீட்டர் உயரமுடைய சிறிய விஷ்ணு சிலை என 4 சிலைகள் கிடைத்தது.

இவை அனைத்தும் உலோக சிலைகள். மேலும் விஷ்ணு சக்கரம் உள்ளிட்ட 3 பொருட்கள், சந்தனகல் ஆகியவை சிதிலமடைந்த நிலையில் கிடைக்க பெற்றது. இது தொடர்பாக பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தாசில்தார் சந்தான கோபால கிருஷ்ணன், மண்டல துணை தாசில்தார் ஆனந்த் ஆகியோர் சென்று சிலைகளை கைப்பற்றி வலங்கைமான் தாலுகா அலுவலகத்தில் கொண்டு வந்து பாதுகாப்பாக வைத்தனர்.

Related Stories: