மன்னார்குடி பகுதியில் ஆதரவற்ற விதவை சான்றுகோரி விண்ணப்பித்தவர்களின் வீடுகளில் கோட்டாட்சியர் நேரில் கள ஆய்வு

மன்னார்குடி : மன்னார்குடியில் ஆதரவற்ற விதவை சான்று கோரி விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் கணவனை இழந்த பெண்களுக்கு வருவாய் கோட்டாட்சியர் மூலம் ஆதரவற்ற விதவை சான்று வழங்கப்படுகிறது.மன்னார்குடி மற்றும் அசேஷம் பகுதிகளில் கணவரை இழந்த 10க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களுக்கு ஆதரவற்ற விதவை சான்றுகள் வழங்கக்கோரி மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

அதில், அசேஷம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரது மனைவி கவுசல்யா, அன்னவாசல் சேணிய தெருவை சேர்ந்த செந்தில் நாதன் மனைவி ஜெயந்தி ஆகியோரின் வீடுகளுக்கு வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி நேற்று நேரில் சென்று மனுதாரர்களிடம் கள விசாரணை மேற்கொண்டார்.அப்போது மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ள முகவரியில் வசிக்கிறாரா, கணவரின் இறப்பு சான்றிதழ், மனுதாரர் மறுமணம் புரிந்துள்ளாரா, உண்மையில் ஆதரவற்ற நிலையில் மனுதாரர் உள்ளாரா, கணவர் இறக்கும் போது, என்ன வேலை செய்தார், அவரின் சொத்துகள் மதிப்பு, அதன் வாயிலாக வரும் வருமானம் அவற்றின் வாயிலாக மனுதாரர் பெறக்கூடிய வருமானம் மற்றும் மனுதாரரின் தனிப்பட்ட வகையில் உரிமை கொண்டாடும் சொத்துகள், அவற்றின் மூலமான வருமானம் போன்றவை குறித்து விசாரணை மேற்கொண்டார்.

இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி கூறுகையில், ஆண்டு வருவாய் ரூ.48 ஆயிரத்துக்குட்பட்ட விதவைகளுக்கு,ஆதரவற்ற விதவை சான்று வழங்க படும். இதற்கான தகுதியுள்ள விதவைகள் இந்த சான்றை பெற்று, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டால், முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும். தகுதியுள்ள விதவைகள் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories: