மேற்பார்வை குழு கூட்டத்தில் தமிழக அரசு திட்டவட்டம் முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது

புதுடெல்லி: ‘முல்லைப் பெரியாறு அணை மிகவும் பாதுகாப்பாகவும், வலுவாகவும் உள்ளது’ என்று மேற்பார்வை குழுகூட்டத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது எனவும், நீர்மட்டம் 142 அடி உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வரும் கேரளா அரசு, அணை அருகே புதிய அணை கட்ட முயற்சிக்கிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த மாதம் தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கிருஷ்ணமூர்த்தி, மூத்த வழக்கறிஞர் உமாபதி மற்றும் வழக்கறிஞர் குமணன் ஆகியோர் முல்லைப் பெரியாறு அணையை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.  இந்த நிலையில் டெல்லி ஆர்.கே.புரம் சேவா பவனில் இருக்கும் ஒன்றிய நீர்வள ஆணையத்தில் முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வை குழுவின் 15வது கூட்டம் நேற்று நடைபெற்றது. மேற்பார்வை குழுவின் தலைவர் குல்சன் ராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழகத்தின் தரப்பில் நீர்வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, முல்லைப் பெரியாறு அணை தொழில்நுட்ப குழுவின் உறுப்பினர் சுப்பிரமணியன், பெரியாறு-வைகை நதிப்படுகை பொறியாளர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், ‘முல்லைப் பெரியாறு அணையில் நேரடியாக துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் ஆகியோர் குழுவாக சென்று ஆய்வு செய்தோம். அதில் அணை பாதுகாப்பாகவும், வலுவாகவும் உள்ளது தெளிவாக தெரியவந்துள்ளது. மேலும் அணைப் பகுதியில் மரங்களை நீக்குவது உட்பட பல்வேறு நிலுவை பணிகள் உள்ளது. அதனை விரைந்து முடிக்க கேரள அரசு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதற்கு அம்மாநில அரசுக்கு மேற்பார்வை குழு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான ஆய்வறிக்கையும் தமிழக அரசு தரப்பில் மேற்பார்வை குழு முன்னிலையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கூட்டத்தில் நடந்த ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்டு இரண்டு மாநில தலைமை செயலாளர்களுக்கும் அடுத்தக்கட்டமாக என்னென்ன நடவடிக்கைகளை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மேற்கொள்ள வேண்டும் என்று மேற்பார்வை குழுவின் தலைவர் குல்சன் ராஜ் கடிதம் மூலம் தெரிவிப்பார். அதனைத்தொடர்ந்து முல்லைப் பெரியாறு நிலுவை பணிகளை தமிழக அரசு உடனடியாக செய்து முடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். முன்னதாக முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மேற்பார்வை குழு எடுக்கும் முடிவே இறுதியானது என உச்ச நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: