தமிழகத்தில் தேர்வு எழுதிய 9ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில்  9ம் வகுப்பு மாணவர்கள்  ஆல் பாஸ் என்று அறிவிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இந்ததேர்வு  முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளிக்கு வராதவர்களுக்கு தனியாக தேர்வு நடத்த வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்த கட்டாய இலவசக் கல்விச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அம்சங்களின் அடிப்படையில் 1 முதல் 14வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படக் கூடாது. அவர்களை பள்ளிகளில் இருந்து வெளியேற்றக் கூடாது. அவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனால் ஒவ்வொரு ஆண்டும் 1 முதல் 14ம் வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதன் பேரில் இந்த ஆண்டும் 1 முதல் 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், 9ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அடுத்து 10ம் வகுப்புக்கு செல்ல வேண்டிய நிலையில் இருப்பதால் அவர்களில் பெரும்பாலும் யாரையும் தேர்ச்சியில்லை என்று அறிவிக்க மாட்டார்கள். அப்படி அறிவித்தால், பத்தாம் வகுப்பு மற்றும் மேனிலைக் கல்விக்கு செல்வோரின் விகிதாச்சாரம் குறையும் என்ற அடிப்படையில் 9ம் வகுப்பிலும் பெரும்பாலும் அனைவரும் தேர்ச்சி என்றே அறிவிப்பார்கள். மாணவர்களின் நலன் கருதி ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்படும் இந்த முறையை இந்த ஆண்டு கடைபிடிக்க பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும், கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் மாணவர்கள் கற்றலில் குறைபாடு இருந்தது. அதனால், 9ம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு பொதுத் தேர்வுக்கு வந்து அதை எழுதியிருந்தால் போதும். அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்றும், 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவித்துள்ளது. மேலும், 9ம் வகுப்பு மாணவர்களை பொறுத்தவரை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே தேர்ச்சி குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பேரில் தற்போதுதமிழகம் முழுவதும், 1 முதல் 8ம் வகுப்புகள்,  மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சிப் பட்டியல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் தயார் செய்து வைத்துள்ளனர். இந்த தேர்ச்சி பட்டியல்களை வெளியிடலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிக்கும் நாளில் தேர்ச்சி பட்டியல் வெளியாகும். இதன்படி, 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர். இது தவிர, பள்ளிக்கு வராமல் இருந்த மாணவர்களுக்கு தனியாக தேர்வு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் 9ம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு பொதுத்தேர்வு எழுதியிருந்தால் போதும். தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.

* 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி இருந்தது.

Related Stories: