வெள்ளிமலையில் ஜமாபந்தி நிறைவு 248 நபர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

சின்னசேலம் : கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலையில் கடந்த 30ந்தேதி ஜமாபந்தி துவக்க விழா நடந்தது. மாவட்ட ஆட்சியாளரின் நேர்முக உதவியாளர்(பொது) மற்றும் ஜமாபந்தி அலுவலர் சுரேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து பல்வேறு வகையான மனுக்களை பெற்றார். மேலும் வருவாய் கணக்குகளையும் ஆய்வு செய்தார். இந்நிலையில் நேற்று வெள்ளிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நடந்தது. கலெக்டர் தர் தலைமை தாங்கினார். கல்வராயன்மலை சேர்மன் சந்திரன், திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் யோகபிருந்தா, ஜமாபந்தி அலுவலர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். கல்வராயன்மலை தாசில்தார் மனோஜ்குமார் வரவேற்று பேசினார்.

கள்ளக்குறிச்சி கலெக்டர் தர் 26 பேருக்கு வீட்டுமனை ஒப்படைகளையும், 111 பேருக்கு பழங்குடியின நலச்சான்றுகளையும், 74 பேருக்கு பழங்குடியின நலவாரிய அட்டைகளையும், 37 பேருக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும் வழங்கினார். முன்னதாக கலெக்டர் தர் பேசும்போது, மலைவாழ் இளைஞர், மாணவர்களும் அரசு வேலையில் சேர வேண்டும் என எண்ணி வெள்ளிமலை, சேராப்பட்டு ஆகிய இடங்களில் அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தபடும் குரூப் 2, குரூப் 4 ஆகிய தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆகையால் இப்பகுதியில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் வனப்பகுதியில் சாலை அமைப்பதில் உள்ள இடர்பாடுகளை கலைந்து விரைவில் சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மலைவாழ் மக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு வருகிறது. ஆகையால் மலைலவாழ் மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுத்து பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் வெள்ளிமலை ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: