'அனைத்தும் சாத்தியம்': மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: அனைத்தும் சாத்தியம் என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள “அனைத்தும் சாத்தியம்” என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை திறந்து வைத்து, மாற்றுத்திறனாளிகள் தாங்கள் பயன்படுத்த விரும்பும் உதவி உபகரணங்கள் வகை மற்றும் மாதிரியின் தேர்வினை வழங்கும் வகையில் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளின் நலனைக் பேணிக் காத்திட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இந்தியாவிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக தனி துறையை உருவாக்கினார். மேலும், அவர்கள் உரிய மரியாதையுடன் அழைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் “மாற்றுத்திறனாளிகள்” என்ற சொல்லையும் அறிமுகப்படுத்தினார். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வினை மேம்படுத்தும் வகையில், அவர்களது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அதிகம் கவனம் செலுத்தி வருவதோடு, மாற்றுத் திறனாளிகள் சமுதாயத்தில் சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும் வாழ பல்வேறு திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 21.4.2022 அன்று சட்டப்பேரவையில் பேசும்போது, “மாற்றுத் திறனாளிகளுக்கென்று அமைக்கப்பட்டுள்ள  ஆணையரகத்திற்கு நானே நேரடியாகச் சென்று, சம்பந்தப்பட்ட அமைப்புகளுடைய நிர்வாகிகளை அழைத்து, இதில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன; என்னென்ன பிரச்சினைகளையெல்லாம் நாங்கள் தீர்த்து வைத்திருக்கின்றோம்;  அதனால் நீங்கள் பெற்றிருக்கக்கூடிய நன்மைகள் என்ன; இன்னும் மீண்டும் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசிப்பதற்காக மிக விரைவிலே ஒரு பெரிய ஆய்வுக் கூட்டத்தை நடத்தி,  நிச்சயமாக அதற்குரிய பரிகாரத்தை இந்த அரசு காணும்” என்று தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரில் சென்று, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்தும், அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் புதிய அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக “அனைத்தும் சாத்தியம்” என்ற பெயரில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்த அருங்காட்சியகம், மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான உபகரணங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் போன்றவற்றை காட்சியகப்படுத்தும் வகையில் செயல் விளக்க மையமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையிலும்,  பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தாங்கள் எதிர்கொள்ளும் தடைகளை கடந்து தீர்வுகளைக் காணவும் இந்த அருங்காட்சியகம் வழிவகை செய்கிறது. இந்த அருங்காட்சியகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற சூழலுடன் வசிக்கக்கூடிய “மாதிரி இல்லம்” வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அருங்காட்சியகமானது பயனாளிகள், படைப்பாளிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் சமூகத்துடனான தொடர்புகளை ஊக்குவிக்கவும்,   ஆராய்ச்சிகள் மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகள் எந்தவித தடையுமின்றி வாழும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.  அத்துடன் 21 வகையான மாற்றுத்திறன் கொண்ட நபர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தவும்,  ஒன்றுகூடி வாழவும், தொழில்நுட்பத் தகவல்கள் மற்றும் உதவி உபகரணங்களை உபயோகப்படுத்த பயிற்சியுடன் கூடிய வழிகாட்டுதலையும் பெற இந்த   அருங்காட்சியகம் உதவுகிறது.

அதனைத் தொடர்ந்து, இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் தாங்கள் பயன்படுத்த விரும்பும் உதவி உபகரணங்கள் வகை மற்றும் மாதிரியின் தேர்வினை வழங்கும் வகையில் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை (Choice Based System of providing assistive devices) மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்து, முதற்கட்டமாக ரூ.9.50 கோடி மதிப்பில் 7,219 நபர்கள் பயன்பெறும் வகையில், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள், காதுக்குப் பின்னால் அணியும் காதொலிக் கருவிகள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் ஆகிய 5 வகையான உபகரணங்களில்,  36 மாதிரிகளை பயனாளிகள் விருப்பத் தேர்வு முறைக்கு அறிமுகப்படுத்தி, 6 பயனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார்.   

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மறுசீரமைக்கப்பட்டு புதியதாக நியமிக்கப்பட்ட அலுவல் சாரா உறுப்பினர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள். மேலும்,  மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக தமிழ்நாடு அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருவதற்காகவும், வாரியத்தின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வருவதற்காகவும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சைகை மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருவதற்காகவும் நன்றி தெரிவித்து, கோரிக்கை மனுக்களை அளித்தார்கள்.    

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., மாற்றுத்திறனாளிகள் நலத் துறைச் செயலாளர் திரு. ஆர். லால்வேனா, இ.ஆ.ப., மாற்றுத்திறனாளிகள் நலத் துறை இயக்குநர் திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.    

Related Stories: