இந்தியாவில் இஸ்லாமியர்கள் குறிவைக்கப்படுகின்றனர் : பாஜகவுக்கு வளைகுடா ஒத்துழைப்பு சபை, தாலிபான் அரசு கண்டனம்

புதுடெல்லி: நபிகள் நாயகம் குறித்த பாஜக நிர்வாகிகளின் சர்ச்சை கருத்தால் இஸ்லாமிய நாடுகளில் இந்தியாவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நுபுர் சர்மா, சமீபத்தில் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கிடைத்தது பற்றிய டிவி விவாதத்தில் பங்கேற்றார். அப்போது, முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறினார். இதை கண்டித்து கான்பூரில் நடந்த கடையடைப்பின் போது, இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது.இந்நிலையில், நுபுர் சர்மாவின் கருத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதன் காரணமாக, நேற்று அவரை கட்சியில் இருந்து தற்காலிக நீக்கி பாஜ தலைமை நடவடிக்கை எடுத்தது. அதேபோல், டெல்லி பாஜ செய்தி தொடர்பாளரான நவீன் ஜிண்டால் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்து கலவரத்தை தூண்டும் வகையில் இருப்பதாக கூறி, அவரை கட்சியில் இருந்து பாஜ நீக்கி உள்ளது.

இந்நிலையில், நபிகள் நாயகம் குறித்த பாஜக நிர்வாகிகளின் விமர்சனத்தை கண்டித்த வளைகுடா நாடுகள், இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று போர்க்குரல் உயர்த்தியுள்ளன. நபிகள் நாயகம் குறித்த நுபுர் சர்மாவின் அவதூறு பேச்சுக்கு வளைகுடா ஒத்துழைப்பு சபையின் பொது செயலாளர் நயீஃப் பலாஹ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பாஜக செய்தித் தொடர்பாளரின் இந்த கருத்து தவறானது. அதை நிராகரிக்க வேண்டும். நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசியதை கண்டிக்கிறேன். குறிப்பிட்ட மதத்தினரின் தீர்க்கதரிசிகள், மத சின்னங்கள், வழிபாட்டுத் தளங்கள் குறிவைக்கப்படுகின்றன. மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி வெறுப்பை தூண்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். என அவர் வலியுறுத்தி இருக்கிறார். இதனிடையே நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜக நிர்வாகிகள் நீக்கப்பட்டதற்கு பஹ்ரைன் வெளியுறவுத்துறை வரவேற்பு தெரிவித்துள்ளது. மத உணர்வுகளை புண்படுத்துதல், மத வெறுப்புணர்வை தூண்டும் முயற்சிகளை கண்டிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.

அதேபோல், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளருக்கு தாலிபான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்லாம் மதத்தையும், முஸ்லீம்கள் உணர்வையும் புண்படுத்துவதை இந்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று ஆப்கன் தாலிபான் அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: