சொந்த ஊரில் ஓய்வு எடுத்த போது பரபரப்பு பைடன் வீட்டின் மீது பறந்த மர்ம விமானம்: பாதுகாப்பான இடத்துக்கு அவசர மாற்றம்

வாஷிங்டன்: சொந்த ஊரில் ஓய்வெடுக்க சென்ற நிலையில், தடை செய்யப்பட்ட வான் பரப்பில் குட்டி விமானம் ஒன்று பறந்ததால், உடனடியாக அதிபர் பைடன் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் இருவரும் நேற்று முன்தினம் சொந்த ஊரான டெலாவரின் ரெஹோபோத் கடற்கரை பகுதியில் உள்ள பூர்வீக வீட்டிற்கு ஓய்வெடுக்கச் சென்றிருந்தனர். அப்போது, தடை செய்யப்பட்ட வான் பரப்பில் சிறிய ரக விமானம் ஒன்று பறந்தது. உடனடியாக உஷாரான ராணுவ போர் விமானங்களும், கடலோர காவல் படை ஹெலிகாப்டர்களும் அந்த விமானத்தை சுற்றி வளைத்து அருகில் இருந்த விமான நிலையத்திற்கு கொண்டு சென்றன. அதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதிபர் பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் இருவரும் அவசர, அவசரமாக பூர்வீக வீட்டிலிருந்து சாலை மார்க்கமாக காரில் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.இது குறித்து அதிபரின் ரகசிய பாதுகாப்பு படையினர் கூறுகையில், ‘‘அதிபர் மற்றும் அவரது மனைவிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. விமான வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றாமல் தவறுதலாக அப்பகுதியில் நுழைந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது’’ என்றனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் அதிபர் பைடனும், அவரது மனைவியும் பூர்வீக இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டனர் என தெரிவித்தனர்.

Related Stories: