ஆலங்காயம் அருகே விவசாய நிலத்திற்குள் நுழைந்த ஒற்றை தந்த காட்டு யானை: காட்டுக்குள் வனத்துறையினர் விரட்டினர்

ஆலங்காயம்: ஆலங்காயம் அருகே விவசாய நிலத்துக்குள் ஒற்றை தந்த காட்டுயானை நுழைந்தது. இதையடுத்து வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டினர். திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த காவலூர் மற்றும் நாயக்கனூர் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதிகளை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில், கடந்த 40 நாட்களுக்கும் மேலாக ஒற்றை தந்தம் கொண்ட காட்டு யானை நடமாட்டம் உள்ளதாகவும், அவ்வப்போது விளை நிலங்களில் பயிரிட்டுள்ள பயிர்களை யானை தொடர்ந்து சேதப்படுத்தி வருவதாகவும் அப்பகுதியினர் வனத்துறையினரிடம் புகார் தெரிவித்திருந்தனர்.

புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு வனத்துறையினர் அப்பகுதியில் யானையை விரட்டும் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு ஆலங்காயம் வனச்சரக அலுவலர் சோமசுந்தரம் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து தீப்பந்தங்களை கையில் ஏந்தியும், கொட்டு மேளங்கள் முழங்கியும் காட்டிலிருந்து விவசாய நிலத்திற்கு வந்த ஒற்றைத் தந்தம் கொண்ட காட்டு யானையை காட்டுக்குள் விரட்டினர்.

Related Stories: