எந்தவித அரசியல் அழுத்தமும் இல்லாமல் காவல்துறை சுதந்திரமாக செயல்படுகிறது: கமிஷனர் சங்கர் ஜிவால் பேட்டி

சென்னை: காவல்துறை எந்தவித அரசியல் அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக செயல்படுகிறது, என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை காவல் துறை மத்திய குற்றப்பிரிவில் வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக 25 நபர்கள் கைது செய்யப்பட்டு, மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்களும், ஆவணங்களும், போலி அரசு முத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் சங்கர் ஜிவால் நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய மற்றும் மாநில அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக போலி நியமன ஆணைகளை கொடுத்து, அதற்காக போலி அரசு முத்திரைகளை பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி மோசடி செய்த கும்பலை கைது செய்துள்ளோம். இதுபோன்ற வழக்குகளில் அரசு துறைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களான அலுவலக உதவியாளர்கள் பலரது தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அதுகுறித்து விசாரிக்கப்பட்டு விரைவில்  நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் யாரும் இது போன்று பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

மத்திய குற்றப்பிரிவில் கடந்த ஒரு வருடத்தில் 79 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவு வழக்குகளில் இந்த ஒரு வருடத்தில் ரூ.190 கோடி மதிப்புடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.150 கோடி மதிப்பிலான சொத்துக்கள் தொடர்பான பிரச்னைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் 10 கொலை சம்பவங்கள் மட்டுமே சென்னையில் நடந்துள்ளது. அதில் 6 கொலைகள் குடும்பத்தகராறு காரணமாகவும், 3 கொலைகள் முன்விரோதம் காரணமாகவும், ஒன்று மட்டும் ரவுடி குழு மோதலால் நடந்த கொலை ஆகும்.

சென்னையில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற அரசியல் கட்சித் தலைவர்களின் குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறேன். 18, 20 கொலைகள் ஒரு மாதத்தில் நடந்ததாக கூறப்படுவது பொய். எந்தவித அரசியல் அழுத்தங்களும் இல்லாமல் சென்னை காவல்துறை சுதந்திரமாக செயல்படுகிறது. குற்றங்களை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும்  எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பல்வேறு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். துணை ஆணையர்களுடன் ஆலோசித்து அறிவுரை  வழங்கி நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: