காங்.கில் இணைந்த 6 எம்எல்ஏக்களும் சுயேச்சைக்குதான் வாக்களிக்கணும்: பகுஜன் சமாஜ் அதிரடி உத்தரவு

ஜெய்ப்பூர்: பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து காங்கிரசுக்கு தாவிய 6 எம்எல்ஏ.க்களுக்கும், பாஜ ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக நிற்கும் பிரபல தொலைக்காட்சி உரிமையாளருக்குதான் வாக்காளிக்க வேண்டும் என்று அக்கட்சி உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் வரும் 10ம் தேதி நடக்கிறது. இதில், காங்கிரசுக்கு 2 இடங்களும், பாஜ.வுக்கு ஒரு இடமும் கிடைப்பது உறுதியாகி விட்டது. மீதமுள்ள ஒரு இடத்துக்கு பிரபல தொலைக்காட்சி உரிமையாளர் சுபாஷ் சந்திரா, பாஜ ஆதரவுடன் சுயேச்சையாக களமிறங்கி உள்ளார்.

இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். இரு கட்சிகளுக்கும் போதிய எம்எல்ஏ.க்கள் பலம் இல்லாததால், மாநில கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவை கோரி உள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் எம்எல்ஏ.க்களை இழுக்க பாஜ குதிரை பேரம் நடத்துவதாக தகவல் வெளியானதால், தனது கடசி எம்எல்ஏ.க்களை உதய்பூரில் உள்ள சொகுசு விடுதியில் காங்கிரஸ் தலைமை பாதுகாப்பாக தங்க வைத்துள்ளது. இந்நிலையில், இந்த மாநிலத்தில் 2018ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சின்னத்தில் நின்று வென்ற 6 எம்எல்ஏ.க்கள் 2019ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தனர். இவர்கள் அனைவரும் பாஜ ஆதரவுடன் நிற்கும் சுயேச்சை வேட்பாளர் சுபாஷ் சந்திராவுக்கு வாக்காளிக்க வேண்டும் என்று பகுஜன்  சமாஜ் நேற்று கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. இது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: