உணவு, எரிசக்தி நெருக்கடிக்கு மேற்கு நாடுகள்தான் காரணம்: ரஷ்ய அதிபர் புடின் குற்றச்சாட்டு

மாஸ்கோ: ‘உலகளவில் ஏற்பட்டுள்ள உணவு, எரிசக்தி நெருக்கடிக்கு மேற்கு நாடுகளே காரணம்,’ என்று ரஷ்ய அதிபர் புடின் குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து, ரஷ்ய அரசு தொலைக்காட்சி ரஷ்ய அதிபர் புடின் அளித்த பேட்டியில் கூறியதாவது: உலக உணவு சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், வளர்ந்து வரும் பிரச்னைகளுக்கு ரஷ்யாதான் காரணம் என குற்றம் சுமத்துவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. உலகளவில் தற்போது ஏற்பட்டுள்ள உணவு, எரிசக்தி நெருக்கடிகளுக்கு மேற்கு நாடுகள் காரணம். ரஷ்யா அல்ல. ரஷ்யாவுக்கு எதிரான மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள், உலகச் சந்தைகளை மோசமாக்கும். உக்ரைனில் இருந்து தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை ரஷ்யா தடுக்கவில்லை. இந்த பிரச்னைகளுக்கு ரஷ்யாவை பலிகடாவாக்க மேற்கு உலகம் முயற்சிக்கிறது. கடலில் வீசப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றினால், உக்ரைன் துறைமுகங்களில் இருந்து பெலாரஸ் வழியாக தானிய கப்பல்களை அனுப்பலாம். இந்த கப்பல்களுக்கான பாதுகாப்பை ரஷ்யா உறுதி செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

* 100 நாட்கள் நடந்த போரில் ரூ.45 லட்சம் கோடி இழப்பு

உக்ரைன் மீதான போரை ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ம் தேதி தொடங்கியது. இது, நேற்று முன்தினத்துடன் 100 நாட்களை கடந்தது. இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று ஆற்றிய உரையில், ‘இந்த போரில் உக்ரைன் நிச்சயம் வெற்றி பெறும். கடந்த 100 நாட்கள் நடந்துள்ள போரினால், உக்ரைனுக்கு ரூ.45 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது,’ என்று தெரிவித்தார்.

Related Stories: