‘தமிழ் வழி கல்வி’ உயர் படிப்புக்கு தடையில்லை...யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த கிராமத்து மாணவி

திருக்காட்டுப்பள்ளி: கல்வி அறியாத பெற்றோருக்கு மகளாக பிறந்த ரெனிட்டா 24 வயதில் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ் வழி கல்வி உயர் படிப்புக்கு தடையில்லை என்பதை நிருபித்து சாதனை படைத்துள்ளார்.தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டி கிராமத்தில் வசித்து வரும் ரவி விக்டோரியா தம்பதியினரின் மகள் ஏஜ்சலின் ரெனிட்டா. இவரது வீடு விழாக்கோலமாக காட்சி அளிக்கிறது. ஊர்மக்கள் திரண்டு வந்து ரெனிட்டாவுக்கு இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஊர் மக்கள் வாழ்த்துக்களால் திக்கி திணறும் ரெனிட்டா யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று 338வது இடம் பிடித்து ஊருக்கு புகழ் தேடி தந்துள்ளதே காரணம்.மைக்கேல்பட்டி தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு படித்துள்ளார். 10ம் வகுப்பில் 500க்கு 490 மதிப்பெண்களும், 12ம் வகுப்பில் 1200க்கு 1,158 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். தமிழ்வழி கல்வியில் பள்ளி படிப்பை முடித்த ரெனிட்டா ஐஏஎஸ் ஆக வேண்டும் என்கிற லட்சிய நோக்கில் பயணம் செய்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேளாண் மற்றும் நீர்பாசன பொறியியல் படித்த ரெனிட்டா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

சிறு வயதில் வேளாங்கண்ணிக்கு குடும்பத்தினருடன் சென்ற ரெனிட்டா சுனாமி பாதிப்பை நேரில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்கள் படும் கஷ்டங்களை பார்த்து அரசு பணியில் இருந்தால் உதவி செய்யலாம் என்ற எண்ணம்தான் ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற தூண்டுகோலாக இருந்தது என்றார்.பெண்கள் வீட்டில் முடங்கி இருக்க கூடாது. வெளி உலகுக்கு வந்து பணி செய்ய வேண்டும் என பெண்களுக்கு அழைப்பு விடுத்தார். ரெனிட்டாவால் எங்கள் கிராமத்துக்கு பெருமை கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தனர் மைக்கேல்பட்டி மக்கள். பள்ளிக்கு செல்லாத தந்தை, ஆரம்ப கல்வியை முடிக்காத தாய் இவர்களுக்கு பிறந்த மகள் ரெனிட்டா இன்று கலெக்டர். கிராமப் பகுதியில் பிறந்து இன்று யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று கலெக்டர் ஆக மாறிய இளம் வயது பெண்ணான ரெனிட்டாவால் இப்பகுதி உள்ள மக்கள் அனைவரும் குதுகலத்துடன் விழா போல கொண்டாடி வருகின்றனர்.

Related Stories: